ஜூரோங் வெஸ்ட்டில் இன்று (30 டிசம்பர்) காலை நிகழ்ந்த சாலை விபத்தில் கனரக லாரியும் ஒரு மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன. அதில் 37 வயது மோட்டார் சைக்கிளோட்டி மரணமுற்றார்.
ஜூரோங் பியர் ரோட்டை நோக்கிச் செல்லும் ஜாலான் பூன் லே சாலையில் நிகழ்ந்த விபத்து குறித்து காலை 8.49 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிளோட்டியின் மரணம் மருத்துவ அதிகாரியால் உறுதிப்படுத்தப்பட்டது. ஸ்டோம்ப் இணையத் தளத்துக்கு அனுப்பப்பட்ட புகைப்படங் களுடன் காணொளிகளும் லாரிக்கு அடியிலிருந்து மோட்டார் சைக்கிளோட்டி வெளியேற்றப்படுவதைக் காட்டின.
இந்த விபத்தில் ஜாலான் பாஹார் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. விபத்து குறித்த போலிஸ் விசாரணை தொடங்கியுள்ளது.