அடுத்தாண்டின் முதல் மூன்று மாதங்களில் மின்சாரக் கட்டணத்தில் உயர்வை மக்கள் எதிர்பார்க்கலாம். அத்துடன் எரிவாயு கட்டணம் குறையும் என்றும் கூறப்படுகிறது.
அடுத்த மூன்று மாதங்களில் மின்சாரக் கட்டணம் சராசரியாக 3.5 விழுக்காடு அதிகரிக்கவுள்ளதாக ‘எஸ்பி குழுமம்’ இன்று கூறியது.
ஜனவரி 1 தொடங்கி மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் இந்த மாற்றங்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதிகரிக்கவுள்ள மின்சாரக் கட்டணத்தைப் பொறுத்தவரை, ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு இதுவே மிகப் பெரிய அதிகரிப்பு என்று சொல்லப்படுகிறது.
எரிசக்தியின் விலை உயர்ந்துள்ள நிலையில் மின்சாரக் கட்டணமும் அதிகரிக்கவுள்ளதாக குழுமம் தெரிவித்தது.
இதன்படி அடுத்த மூன்று மாதங்களுக்குரிய மின்சாரக் கட்டணத்தை முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் ஒரு யூனிட்டுக்கு 81 காசு உயர்வு இருக்கும்.
இதுவரை ஒரு யூனிட்டுக்கு 23.43 காசு என்று மின்சாரக் கட்டணம் கட்டி வந்தோர், அடுத்த மூன்று மாதங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 24.24 காசு கட்ட வேண்டியிருக்கும்.
பொருள், சேவை வரியைச் (ஜிஎஸ்டி) சேர்க்காமல், இந்தக் கட்டண உயர்வு கணக்கிடப்பட்டுள்ளது.
இதற்குமுன் ஜிஎஸ்டியைச் சேர்க்காமல் 2014ஆம் ஆண்டின் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஒரு யூனிட்டுக்கு 25.28 காசு என ஆக உயர்வாக இருந்தது.
அதற்கு அடுத்த நிலையில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்ந்து உள்ளது.
இவ்வாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரை ஒரு யூனிட்டுக்கு 24.22 காசு என மின்சாரக் கட்டணம் கணக்கிடப்பட்டது.
இம்மாற்றங்கள் ‘எஸ்பி குழுமம்’ மூலம் மின்சார வசதியைப் பெறும் வீடுகளுக்கு மட்டும் பொருந்தும்.
கட்டண மாற்றம் நடப்புக்கு வந்த பின், நான்கறை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களின் மாதாந்திர மின்சாரக் கட்டணம், சராசரியாக $2.76 வித்தியாசத்தில் அதிகரிக்கும் என்று உதாரணம் காட்டித் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து எரிவாயுக் கட்டணங்கள் குறையும் என்று ‘சிட்டி கேஸ்’ நிறுவனம் அறிவித்தது.
அடுத்த ஆண்டின் முதல் காலாண்டுப் பகுதியில் எரிவாயுக் கட்டணம் 4.22 விழுக்காட்டு வித்தியாசத்தில் குறையவுள்ளது.
ஜிஎஸ்டியைச் சேர்க்காமல் கணக்கிட்டதில் இப்போது ஒரு யூனிட்டுக்கு 17.99 காசை எரிவாயுக் கட்டணத்திற்குக் கட்டி வருவோர், அடுத்த காலாண்டில் 17.23 காசு கட்டுவர்.
முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் எரிபொருள் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால் எரிவாயுவுக்குரிய கட்டணங்களும் குறையவுள்ளதாக நிறுவனம் கூறியது.
மின்சாரக் கட்டணங்கள் உயரும் அதே வேளையில் எரிவாயு கட்டணங்கள் குறைவது எப்படி என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
“வெவ்வேறு எரிபொருள் வகைகளைப் பயன்படுத்துவதாலும் அவற்றின் விலை வேறுபட்டு இருப்பதாலும் இவ்வாறு மின்சாரக் கட்டணமும் எரிவாயுக் கட்டணமும் வேறுபடுகின்றன,” என்று எரிசக்தி சந்தை ஆணையம் பதிலளித்தது.
எஸ்பி குழுமமும் ‘சிட்டி கேஸ்’ நிறுவனமும் எரிசக்திச் சந்தை ஆணையத்தின் விதிமுறைகளின்படி, ஒவ்வொரு காலாண்டிலும் மின்சாரக் கட்டணங்களையும் எரிவாயு கட்டணங்களையும் மறுஆய்வு செய்வது வழக்கம்.