நாளையிலிருந்து புகைபிடிக்க, சிகரெட் வாங்க, விற்க, விநியோகிக்க குறைந்தபட்ச வயது 20ஆக உயர்த்தப்படுகிறது.
2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இந்தக் குறைந்தபட்ச வயது 21ஆக உயர்த்தப்படும்.
இளையர்கள் புகைபிடிப்பதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
குறிப்பிட்ட வயதுக்குக் குறைவானவர்கள் சிகரெட் வாங்குவதை புதிய சட்டம் தடுக்கிறது. குறைந்தபட்ச வயது மாற்றப்படுவது குறித்து 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து புகைபிடிப்பதற்கான குறைந்தபட்ச வயது 18லிருந்து 19க்கு உயர்த்தப்பட்டது.
சில்லறை வர்த்தகர்கள், இறக்குமதியாளர்கள், மொத்த வியாபாரிகள் உட்பட புகையிலை நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச வயதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
20 வயதுக்கும் குறைவானவர்
களிடம் புகையிலை கொண்ட பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தும் நோட்டீசுகளைக் காட்சிக்கு வைக்குமாறு கடைகளுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச வயதுக்கும் குறைவானவர்களிடம் புகையிலை விற்பது தொடர்பில் முதல்முறையாகக் குற்றம் புரியும் வர்த்தகர்களுக்கு அதிகபட்சமாக $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
தொடர்ந்து அக்குற்றத்தைப் புரிபவர்களுக்கு $10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
அத்துடன் சேர்த்து முதல்முறை குற்றம் புரியும் வர்த்தகர்களின் புகையிலை விற்பனை உரிமம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும்.
தொடர்ந்து குற்றம் புரிவோரின் உரிமம் நீக்கப்படும்.
12 வயதுக்கும் குறைவானோரிடமோ அல்லது பள்ளிச் சீருடை அணிந்திருக்கும் குறைந்த வயதினரிடமோ புகையிலை விற்கும் கடைகளின் உரிமம், முதல்முறைகுற்றமாக இருந்தாலும் உடனடியாக நீக்கப்படும்.
குறைந்தபட்ச வயதுக்கும் குறைவானோரிடம் புகையிலை கொடுப்பது தொடர்பில் முதல்முறை குற்றம் புரிவோருக்கு அதிகபட்சமாக $500 வரை அபராதம் விதிக்கப்படலாம். இந்தக் குற்றத்தைத் தொடர்ந்து செய்வோருக்கு $1,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
குறைந்தபட்ச வயதுக்கும் குறைவானர்களுக்கான புகையிலை வாங்குவது தொடர்பாக முதல்முறை குற்றம் புரிவோருக்கு $2,500 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
இந்தக் குற்றத்தைத் தொடர்ந்து செய்வோருக்கு $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
குறைந்தபட்ச வயதுக்கும் குறைவானவர்கள் புகைபிடித்தாலோ அல்லது புகையிலை வாங்கினாலோ அல்லது புகையிலை வைத்திருந்தாலோ அவர்களுக்கு $300 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
குறைந்தபட்ச வயதுக்கும் குறைவானவர்களிடம் புகையிலை விற்கும் கடைக்காரர்கள் பற்றி சுகாதார அறிவியல் ஆணையத்தின் புகையிலை கட்டுப்பாட்டுக் கிளையிடம் பொதுமக்கள் புகார் செய்யலாம்.
தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் 6684 2037 அல்லது 6684 2036.