நடைபாதைகளில் மின்ஸ்கூட்டர் ஓட்டியதற்காகப் பிடிபட்டவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 6,000 எச்சரிக்கைக் குறிப்புகள் விடுக்கப்பட்டதாகவும் இந்த எண்ணிக்கை நவம்பர் மாதத்தைக் காட்டிலும் கிட்டத்தட்ட இருமடங்கு என்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது.
நடைபாதைகளில் மின்ஸ்கூட்டர் ஓட்டுவோருக்கு இன்று ஜனவரி 1 முதல் தண்டனை விதிக்கப்படும். அவ்வாறு பிடிபடுபவர்களுக்கு $2,000 வரையிலான அபராதம், மூன்று மாதம் வரையிலான சிறைத் தண்டனை ஆகியன விதிக்கப்படலாம்.
தண்டனை விதிப்பு நடப்புக்கு வருவதையொட்டி எச்சரிக்கை விடுக்கப்பட்ட விவரங்களை ஆணையம் நேற்று வெளியிட்டது.
சட்டம் கடுமையாக அமலாக்கப்படுவதை உறுதிசெய்வதன் தொடர்பில் தீவு முழுக்க சுற்றுக்காவலை தீவிரப்படுத்த இருப்பதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளிடம் ஆணையம் கூறியது.
அமலாக்க முயற்சிகளின் ஒரு பகுதியாக பல்வேறு பகுதிகளில் கண்காணிப்புக் கருவிகள் நிறுவுவது தொடரும் என்றும் அது தெரிவித்தது.
இதுபோன்ற முயற்சிகளோடு தவறு செய்யும் மின்ஸ்கூட்டர் ஓட்டுநர்கள் பற்றி MyTransport.SG கைபேசிச் செயலி வழியாகவும் புகார்கள் வருவதாக ஆணையத்தின் அறிக்கை தெரிவித்தது.
சிங்கப்பூரில் மின்ஸ்கூட்டர் தொடர்பான விபத்துகள் அடுத்தடுத்து நிகழ்ந்ததில் 65 வயது சைக்கிளோட்டி மாண்டார்; ஏராளமான பாதசாரிகள் காயமுற்றனர். இவற்றைத் தொடர்ந்து கடுமையான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன.
மின்ஸ்கூட்டருக்கு ஒட்டுமொத்தமாக தடைவிதிக்கப்படவில்லை. சுமார் 440 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்டிருக்கும் சைக்கிளோட்டப் பாதை கட்டமைப்பில் அவற்றை ஓட்டிச் செல்லலாம். இந்தக் கட்டமைப்பை 2030ஆம் ஆண்டுவாக்கில் மூன்று மடங்காக அதிகரிக்க அரசாங்கம் திட்டம் வகுத்துள்ளது.