இணைய மோசடிச் சம்பவங்கள் சிங்கப்பூரில் அதிகரித்த வண்ணம் உள்ளதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு போலிஸ் கேட்டுக்கொண்டு உள்ளது. குறிப்பாக அதிர்ஷ்டக் குலுக்கு மோசடிகள் பெருகி உள்ளன.
2019 நவம்பர் மாதம் வரையில் இந்த வகை மோசடிச் சம்பவங்களில் $461,000 தொகை பறிபோனதாக போலிசின் ஆக அண்மைய தகவல்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இந்த காலக்கட்டத்தில் அதிர்ஷ்டக் குலுக்கு மோசடி தொடர்பாக 386 போலிஸ் புகார்கள் செய்யப்பட்டு உள்ளன.
அண்மைய மாதங்களில் புதிது புதிதாக மோசடிகள் பெருகி வருவதாக போலிஸ் குறிப்பிட்டுள்ளது. அவற்றில் ஒன்று சிங்டெல் தொழில்நுட்ப உதவியாளர் என்று சொல்லி மோசடிச் செயலில் ஈடுபடுவது.
இந்த வகை மோசடியில் $2.5 மில்லியன் தொகையை பொதுமக்கள் இழந்துள்ளதாக அது தெரிவித்தது.
மோசடிக்காரர்கள் தொலைபேசி வழி தொடர்புகொண்டு மோடம் இல்லது இணையத்தொடர்பில் சிக்கல்கள் இருப்பதாகக்கூறி டீம்வியூவர் அல்லது எனிடெஸ்க் போன்ற மென்பொருள்களை கணினியில் பதிவிறக்கம் செய்யுமாறு கூறுவர்.
அப்போதுதான் தொலைவிலிருந்தவாறே இணையக் கோளாற்றைச் சரிசெய்ய முடியும் என்பர் அவர்கள்.
பின்னர் இணைய வங்கிக் கணக்கில் உள்நுழையுமாறு அவர்கள் கேட்டுக்கொள்வர். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை வேறு கணக்கிற்கு மாற்றிவிடுவர். இது அந்தப் பயனாளர்களுக்குத் தெரியாமல் நடக்கும்.
கடன் தருவதாகக் குறுஞ்செய்தி மூலம் தகவல் பரப்பி நடக்கும் மோசடி பற்றியும் போலிசார் விளக்கி உள்ளனர்.
அந்த மோசடியில் 2019 பிப்ரவரி முதல் நவம்பர் வரை 32 பேர் சிக்கியதாகவும் அவர்கள் $135,000 வரை பணத்தை இழந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இணையத்தில் பொருட்களை வாங்கும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஊடகக் கல்வியறிவு மன்றத்தைச் சேர்ந்த டாக்டர் முகமது எல்மீ நெக்மட் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்
கழக உதவிப் பேராசிரியரான அவர், மோசடிகளில் இனியும் பலர் சிக்காமலிருக்க அதுதொடர்பான விழிப்புணர்வைப் பெறுவது அவசியம் என்றார்.