புதிய வழிபாட்டு மண்டபம், புதிய பெரிய தங்க புத்தர் சிலை ஆகியவற்றைத் திறந்துவைத்து சிங்கப்பூரின் ஆகப் பழமையான அறநிறுவனங்களில் ஒன்றான புத்திஸ்ட் லாட்ஜ், தனது 85வது ஆண்டு நிறைவை நேற்று கொண்டாடியது.
சிங்கப்பூர் புத்திஸ்ட் லாட்ஜின் கிம் யாம் சாலை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், புத்திஸ்ட் லாட்ஜும் சிங்கப்பூரின் ஏனைய சமய அமைப்புகளும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தவும் நல்லிணக்கத்தைப் பேணவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் தாம் மகிழ்வதாக கூறினார்.
“சிங்கப்பூர் போன்ற பல இன, பல சமய, பல கலாசார சமூகம் எவ்வாறு ஒரே மக்களாக ஒன்றுபட்டு இருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பார்க்க இது சரியான தருணம்.
“உலகெங்கிலும் பிரிவுகள் எவ்வாறு சமூகங்களைப் பிளவுபடுத்துகிறது என்பதைப் பார்க்கும்போது, சமய நல்லிணக்கம் என்பது எப்பொழுதும் நீடித்திருக்கும் என எடுத்துக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல,” என்று நிதியமைச்சருமான திரு ஹெங் கூறினார்.
சிங்கப்பூர் போன்ற ஒரு பன்முகத் தன்மையான சமூகம் பொய்ச் செய்திகளின் நாசகார விளைவுகள் குறித்து கவனமாக இருக்கவேண்டும் என்று தமது மாண்டரின் உரையில் திரு ஹெங் எச்சரித்தார்.
இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிராக பௌத்த சிங்கள பெரும்பான்மையினரைத் தூண்டும் முயற்சியில் பொய்ச் செய்தியைப் பரப்புவதற்கு பேஸ்புக் பயன்படுத்தப்பட்டதை அவர் உதாரணமாக மேற்கோள்காட்டினார்.
“இது சிங்கப்பூரில் நடக்கவில்லை என்றாலும், சிங்கப்பூர் விழிப்புடன் இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என்ற துணைப் பிரதமர், கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட இணையம் வழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்துக்கும் எதிரான பாதுகாப்பு சட்டத்தை குறிப்பிட்டுப் பேசினார்.
“ஆனால், சமயங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பேண சட்டம் மட்டும் போதாது. மிக முக்கியமாக, சிங்கப்பூரில் உள்ள பல்வேறு சமயங்கள் சிங்கப்பூரின் பல கலாசார சமுதாயத்தின் தனித்துவத்தை பொக்கிஷமாகப் பாதுகாக்கின்றன. பரஸ்பர சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிக்கின்றன. மற்றவர்களின் நம்பிக்கைகளுக்கு மிக உயர்ந்த மரியாதை கொடுக்கின்றன,” என்று அவர் கூறினார்.
புதிய கட்டடத்திற்கான திட்டங்கள் 2015ல் உயிரிழந்த புத்திஸ்ட் லாட்ஜின் முன்னாள் தலைவர் திரு லீ போக் குவான் தலைமையில் 2014ல் திட்டமிடப்பட்டன. இந்த மேம்பாட்டில், நிதி உட்பட பல சவால்களை லாட்ஜ் எதிர்நோக்கியது. தற்போதுள்ள வசதிகளின் மேம்பாடு உட்பட கட்டுமானச் செலவுகள் 63 மில்லியனைத் தாண்டியது.
பிற இனங்கள், சமயங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட சமூகத்திற்கு திருப்பித் தருவதில் லாட்ஜின் முயற்சிகளையும் திரு ஹெங் பாராட்டினார்.
ஜாமியா சிங்கப்பூர், இந்து அறக்கட்டளை வாரியம், சிங்கப்பூர் தாவோயிஸ்ட் சம்மேளனம் ஆகியவற்றுடன் இணைந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. 1979 முதல் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவிநிதி வழங்குகிறது. 2018ல், லாட்ஜ் 1,100க்கும் அதிகமான மாணவர்களுக்கு $800,000 கல்வி உதவித்தொகையை வழங்கியது. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் (52%) சீனரல்லாதவர்கள். ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குகிறது.
கடந்த ஜூன் மாதம் அவர் சிங்கப்பூர்களை அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட ஊக்குவிக்கும் தேசிய முயற்சிக்கு ஏற்ப இந்த நடவடிக்கைகள் உள்ளன என்று துணைப் பிரதமர் ஹெங் கூறினார்.