உலகிலேயே மிகவும் பாதுகாப்பான, நேரம் தவறாமல் சேவையாற்றக்கூடிய விமான நிறுவனங்கள் ஆசிய பசிபிக் பகுதிகளைச் சேர்ந்தவையாகத்தான் இருக்கின்றன.
ஆக பாதுகாப்பு மிக்க நிறுவனங்களில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 6வது இடத்தைப் பிடித்துள்ளது.
AirlineRatings.com என்ற இணைய நிறுவனம் உலகிலேயே எந்த விமான நிறுவனம் மிகவும் பாதுகாப்பானது என்பதை தலைசிறந்த 20 நிறுவனங்களை ஒப்பிட்டுப் பார்த்து பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் குவான்டாஸ் ஏர்வேஸ் நிறுவனம்தான் உலகிலேயே மிகவும் பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஏர் நியூசிலாந்து, தைவானின் இவா ஏர்வேஸ் ஆகியவை இதில் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.
ஹாங்காங்கின் கேத்தே பசிபிக் ஏர்வேஸ் நிறுவனம் ஒன்பதாவது இடத்திலும் வெர்ஜின் ஆஸ்திரேலியா ஹோல்டிங்ஸ் நிறுவனம் 10வது இடத்திலும் பட்டியலிடப்பட்டு உள்ளன.
இதனிடையே, சென்ற ஆண்டில் விமானங்கள் சம்பந்தப்பட்ட உயிர்பலி விபத்துகள் சராசரி அளவான 5 விழுக்காட்டைவிட கூடி 20 ஆகிவிட்டது என்று ‘ஏவியேஷன் சேஃப்டி நெட்வொர்க்’ என்ற அமைப்பு சில நாட்களுக்கு முன் தெரிவித்தது.
அந்த விபத்துகளில் பாதிக்கும் மேற்பட்டவை வடஅமெரிக்காவில்தான் நிகழ்ந்தன. 20 விமான விபத்துகளில் மொத்தம் 283 பேர் கொல்லப்பட்டனர்.
எத்தியோபியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 மேக்ஸ் விமானம் சென்ற ஆண்டு மார்ச்சில் விபத்துக்குள்ளானதில் 157 பேர் கொல்லப்பட்டனர். அந்த விபத்தை அடுத்து உலகம் முழுவதும் அந்த ரக விமானங்கள் பயன்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டன.
கடந்த 2018ல் உலகம் முழுவதும் நிகழ்ந்த விமான விபத்துகளின் எண்ணிக்கை 15.
இருந்தாலும் விமான விபத்துகளில் மரணம் அடைந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையைப் பார்க்கையில் 2019 பாதுகாப்பான ஆண்டுகள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
விமான விபத்துகளின் ஐந்தாண்டு சராசரி அளவு 14 விபத்துகள் என்றும் 480 மரணங்கள் என்றும் கணக்கிடப்பட்டு இருப்பதாக நெதர்லாந்தைத் தளமாகக் கொண்டு செயல்படும் அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இவை ஒருபுறம் இருக்க, நேரம் தவறாத சேவைகளைப் பார்க்கையில் 2019ல் கருடா இந்தோனீசியா ஏர்லைன்ஸ் முதலிடம் வகிப்பதாக OAG Aviation Worldwide என்ற நிறுவனம் தனிப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவித்தது.
இவ்வேளையில், உலகளவில் விமானங்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 2037ஆம் ஆண்டு வாக்கில் இரண்டு மடங்காகி 8.2 பில்லியனாக இருக்கும் என்று அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம் முன்னுரைத்து உள்ளது.
இந்த ஆண்டில் சுமார் 4.7 பில்லியன் மக்கள் விமானப் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகிலேயே 30 மில்லியனுக்கும் அதிக விமானப் பயணிகளுக்கு நேரம் தவறாமல் தலைசிறந்த சேவையாற்றிய மாபெரும் விமான நிலையங்களில் மாஸ்கோ விமான நிலையம் முதலிடம் வகிப்பதாக இந்த நிறுவனம் வரிசைப்படுத்தி இருக்கிறது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity