உந்து நடமாட்ட மற்றும் தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான விவகாரங்கள் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் அடுத்த வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பயிருக்கிறார்கள்.
சைக்கிளோட்ட பாதைகள். நடைபாதைகள், மின்ஸ்கூட்டர்கள் மற்றும் மின்சார சைக்கிள்கள், உணவு விநியோகிப்பாளர்கள் பற்றி அந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகள் அமைந்து இருக்கும் என்று நாடாளுமன்ற அலுவலர் நேற்று வெளியிட்ட நாடாளுமன்ற விவகாரங்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சார சைக்கிள்களை சாலைகளில் அனுமதிக்க திட்டம் உள்ளதா, இவ்வாண்டு இறுதிக்குள் கூடுதலாக எத்தனை கிலோ மீட்டர் சைக்கிளோட்ட பாதைகள் அமைக்கப்படும், பிஎம்டி சாதனங்களின் தடை காரணமாக மின்சார சைக்கிள்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமானால் அதன் காரணமாக விபத்துகள், சாலைப் போக்குவரத்து மற்றும் உந்து நடமாட்டக் குற்றங்கள் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் போன்ற கேள்விகள் அவற்றில் அடங்கும்.
நடைபாதைகளில் தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் செல்லக்கூடாது என நிலப் போக்குவரத்து ஆணையத்தின் சகிப்புத்தன்மையற்ற போக்கு புத்தாண்டு தினத்தில் அமலானது. அதன் தொடர்பில் இந்தக் கேள்விகள் அமைந்திருக்கும்.
மின்ஸ்கூட்டர் தொடர்பான விபத்துகள் தொடர்ந்து நிகழ்ந்து வந்ததால், நடைபாதைகளில் தனி நபர் நடமாட்டச் சாதனங்களுக் கான தடை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடப்புக்கு வந்தது.
அன்று முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை பிஎம்டி சாதனங்கள் தொடர்பான குற்றம் புரிந்தோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
புதிய விதிமுறையின்படி, முன்பு சாலைகளில் செல்ல தடை விதிக்கப்பட்ட மின்ஸ்கூட்டர்கள் இப்போது சைக்கிளோட்ட பாதைகளில் மட்டும்தான் செல்ல முடியும்.
சிங்கப்பூரின் பொய்ச் செய்தி சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது, பள்ளிக் கட்டணங்களைச் செலுத்தாத மாணவர்களுக்கு அவர்களின் தேர்வு முடிவுகளைக் கொடுக்காமல் வைத்திருக்கும் கல்வி அமைச்சின் முடிவு போன்ற விவகாரங்கள் குறித்து மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்பார்கள்.
தொடர்பு தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் பதிலளிக்க கோரி, நியமன உறுப்பினர் அந்தியா ஓங், பொஃப்மா எனப்படும் பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித்திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்டம் தொடர்பில் இரு கேள்விகளைச் சமர்ப்பித்திருக்கிறார்.
தொகுதி எல்லை மறுஆய்வுக் குழு தனது ஆய்வை முடித்து விட்டதா என்றும் அந்த அறிக்கை எப்போது பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்றும் அல்ஜுனிட் குழுத் தொகுதி பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், பிரதமர் லீ சியன் லூங்கைக் கேட்பார்.
வீவக வீடுகளில் பூனைகள் வளர்ப்பது பற்றி நீ சூன் குழுத் தொகுதி உறுப்பினர் லுயிஸ் இங் கும் மார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதி உறுப்பினர் ஓங் டெங் கூனும் கேள்வி எழுப்புவார்கள்.
திங்கட்கிழமை நாடாளுமன்றக் கூட்டத்தில் ஏழு மசோதாக்கள் முதல் வாசிப்புக்கு தாக்கல் செய்யப்படும்.