கூகல் நிறுவனம் தன்னுடைய பாடத்திட்டத்தையும் ‘சமூகத்திற்கு கணினி அறிவு’ என்ற தனது செயல்திட்டத்தையும் விரிவுபடுத்துகிறது.
இதனையடுத்து அடுத்த மூன்றாண்டுகளில் இலவசமாக நடத்தப்படும் கணினி நிரலிடுதல் (Code) வகுப்புகளில் மேலும் 6,700 மாணவர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விரிவாக்கத் திட்டத்திற்காக கூகல் நிறுவனமும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு வாரியமும் தலா $1 மில்லியன் வழங்குகின்றன.
2017ல் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அது முதல் குறைந்த வருவாயைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2,300 மாணவர்கள் கணினி அடிப்படை நிரலிடுதல் தேர்ச்சிகளைக் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.
கடந்த 2019ல் நடந்த கணினி நிரலிடுதல் வகுப்புகளில் கலந்துகொண்டு தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்ச்சி நேற்று ‘அவர் தெம்பனிஸ் ஹப்’ மையத்தில் நடந்தது.
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான ஹெங் சுவீ கியட் அந்த நிகழ்ச்சியில் இந்த அறிவிப்புகளை விடுத்தார்.
இந்தச் செயல்திட்டம் தொழில்நுட்பத்தில் நாட்டத்தை ஏற்படுத்துவதோடு நின்றுவிடாமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் மாணவர்கள் நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ளவும் உதவி இருக்கிறது என்றார் அமைச்சர்.
மாணவர்கள் தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் விருப்பத்துடன் பலவற்றையும் கற்றுக்கொண்டு தேர்ச்சிகளை மேம்படுத்திக்கொண்டு முடிவில் தங்களுடைய கனவுகளை நனவாக்க இந்தத் திட்டம் உதவுவதாகவும் துணைப் பிரதமர் தெரிவித்தார்.