நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தலைவரும் தனிச்சிறப்புமிக்க பல்கலைக்கழகப் பேராசிரியருமான சுப்ரா சுரேஷ் பெயரில் விரிவுரைத் தொடர் ஒன்றை இந்தியாவின் சென்னை ஐஐடி கல்வி நிலையம் தொடங்கி இருக்கிறது.
அந்தக் கல்வி நிலையத்தில் படித்தவரும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனருமான சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன் அளித்த நன்கொடையை வைத்து பெங்களூரில் தொடங்கப்பட்டு இருக்கும் அந்தப் புதிய விரிவுரைத் தொடர், அனைத்துலக முன்னணி கல்விமான்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகளை சென்னை ஐஐடிக்கு கவர்ந்து ஈர்க்கும். அவர்கள் ஆண்டுக்கு இரு முறை அங்கு உரையாற்றுவர்.
முதலாவதாக இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐஐடி சென்னை வளாகத்தில் இந்த விரிவுரை நிகழ்ச்சி இடம்பெறும் என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.