சமுதாயம் பலன் அடைவதற்காக தமிழர் பேரவை போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதில் அரசாங்கம் மகிழ்ச்சி அடைவதாக புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் பேரவையின் ஆலோசகருமான திரு முரளி பிள்ளை தெரிவித்தார்.
நல்ல யோசனைகளின் மீது அரசாங்கத்திற்கு ஏகபோக உரிமை இல்லை என்று அமைச்சர் இந்திராணி ராஜா கடந்த வியாழக்கிழமை தெரிவித்ததை நினைவுகூர்ந்த அவர், தமிழர் பேரவை போன்ற அமைப்புகள் சமூகத்தின் தேவைகளை அடையாளம் காணும் முயற்சிகளை வழிநடத்தலாம் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழர் பேரவையின் கல்வி உன்னத விருது மற்றும் சமூக உதவி கல்வி நிதிக்கான விருது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரு முரளி, இவ்விருதுகளின் மூலம் பயனடைந்த மாணவர்கள் பிற்காலத்தில் பிறருக்கு உதவ முற்படவேண்டும் என்றும் நிகழ்ச்சியில் உரையாற்றியபோது கூறினார்.
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாலர் பள்ளி முதல் தொடக்கக்கல்லூரி வரையிலான மாணவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
கல்வி உன்னத விருதுகள் 35 மாணவர்களுக்கும் சமூக உதவி கல்வி நிதி 165 மாணவர்களுக்கும் வழங்கப்பட்டன. அவர்களுள் ஒருவரான ராஃபிள்ஸ் தொடக்கக் கல்லூரி மாணவி மிரிதினி கிரிதரன், 18, தமது உழைப்பை அந்த விருது அங்கீகரிப்பதாகக் கூறினார்.
பயிற்சி ஏடுகள், குறிப்பேடுகள் வாங்குவதற்காக அந்த உதவித் தொகையைப் பயன்படுத்தப்போவதாகச் சொன்னார் இவ்வாண்டு மேல்நிலைத் தேர்வு எழுதவிருக்கும் மிரிதினி. பாலர் பள்ளி மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது இவ்வாண்டு நிகழ்ச்சியின் சிறப்பம்சம். “தொடக்கப்பள்ளி வரை காத்திருக்காமல் அதற்கு முன்பாகவே மாணவர்களுக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துத் தரவேண்டும் என எண்ணினோம்,” என்றார் பேரவையின் துணைத் தலைவர் அருண் வாசுதேவ் கிருஷ்ணன்.
விருது கிடைத்ததில் தனக்கும் தன் பெற்றோருக்கும் மகிழ்ச்சி என்றார் ஆறு வயதான திவாஷினி சுந்தரராஜன். “புதிய வண்ணப் பென்சில்களையும் தாள்களையும் வாங்குவேன்,” என்றார் அவர்.
வசதி குறைந்த எந்த மாணவரும் பின்தங்கிவிடக்கூடாது என்று பேரவையின் தலைவர் திரு வெ. பாண்டியன் தெரிவித்தார்.
“ஊர் கூடி தேர் இழுப்பதைப் போன்று இது சமூகத்திற்கு சமூகமே மேற்கொண்டுள்ள அரிய முயற்சியாகும்,” என்று அவர் கூறினார்.
பதினைந்து ஆண்டுகளாக பேரவை இத்திட்டத்தைத் வழிநடத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஆண்டுகள் பல கடந்தாலும் உலக நடைமுறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும் பேரவையின் முயற்சி மாறவில்லை என்றார்.
லீ அறநிறுவனம், சிங்கப்பூர் பந்தயப் பிடிப்புக் கழகம், சிண்டா, லிஷா, குவான் இங் தோங் சுட் கோயில் ஆகிய அமைப்புகளுடன் தனிநபர்கள் சிலரும் இம்முயற்சிக்கான முக்கிய கொடையாளிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.