குழந்தை பெறக்கூடிய வயதில் உள்ள திருமணமான பெண்கள், தாங்கள் விரும்புவதைவிட குறைவான முறை பாலியல் உறவு கொள்வதாக புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. அதற்கு மனவுளைச்சல், சோர்வு போன்றவை காரணங்களாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
பெண்கள் கர்ப்பமடைவதற்கான காலமும் இதனால் நீட்டிக்கப்படலாம். திருமணமான பெண்களிடையே உள்ள பாலியல் உறவை ஆராய இந்த ஆய்வு முதன்முறையாக இங்கு நடத்தப்பட்டது. 25க்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 3.7 முறை பாலியல் உறவு கொள்வதாக ஆய்வு கண்டறிந்தது.
மாறாக, 30க்கும் 34 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் மாதத்திற்கு 2.6 முறை பாலியல் உறவு கொள்கின்றனர்.
தாங்கள் தற்போது கொள்ளும் பாலியல் உறவைவிட இரு மடங்கும் அதிகமான முறை உறவு கொள்ள தாங்கள் விரும்புவதாக இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் கூறினர்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் லீ குவான் இயூ பொதுக் கொள்கை ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் டான் போ லின் நடத்திய இந்த ஆய்வில் திருமணமான 657 பெண்கள் பங்கெடுத்தனர்.
இந்த ஆய்வில் பங்கெடுத்தவர்களின் பாலியல் நடவடிக்கை 14 வாரங்களாக கண்காணிக்கப்பட்டது. ஆய்வு நடத்தப்பட்ட காலத்தில் தாங்கள் ஒருமுறைகூட பாலியல் உறவு கொள்ளவில்லை என சுமார் 15 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
பாலியல் உறவு கொண்டவர்களில், நான்கில் ஒரு பெண் மட்டுமே மூன்று மாதங்களுக்குள் கர்ப்பமடைந்தார். மாறாக, மாதத்திற்கு எட்டு முறை பாலியல் உறவு கொண்டவர்களில் பாதி பேர் கர்ப்பமடைந்ததாக இந்த விவகாரத்தையொட்டி நடத்தப்பட்ட அமெரிக்க ஆய்வு ஒன்றை பேராசிரியர் டான் சுட்டினார்.
மனவுளைச்சலும் சோர்வும் எந்த அளவிற்கு பாலியல் உறவைப் பாதிக்கிறது என்பதை ஆராய இந்த ஆய்வு முற்பட்டதாக அவர் தெரிவித்தார்.