சுடச் சுடச் செய்திகள்

வூஹான் நிமோனியா என சந்தேகிக்கப்படும் முதல் சம்பவம்

வூஹான் நிமோனியா கிருமி தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் முதல் சம்பவம் குறித்து தனக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்தது.

சீனாவைச் சேர்ந்த மூன்று வயது சிறுமிக்கு இங்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டிருப்பதும் சீன நகரான வூஹானுக்கு அவர் சென்றிருந்ததும் தெரிய வந்துள்ளது.

கூடுதல் மருத்துவப் பரிசோதனை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அச்சிறுமி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக அமைச்சு கூறியது. அச்சிறுமியின் உடல்நிலை சீராக இருப்பதாக அது தெரிவித்தது.

வூஹான் நகரில் ஏற்பட்டுள்ள கிருமித் தொற்று குறித்து மற்ற நாடுகள் அக்கறை தெரிவித்துள்ளன. இந்தக் கிருமிக்கும் வூஹானில் உள்ள மொத்த வியாபார கடல் உணவுச் சந்தைக்கும் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. 

அங்கு கடல் உணவு மட்டுமல்ல, பறவைகள், பாம்புகள் உள்ளிட்ட உயிருடன் இருக்கும் விலங்கு

களுடன் முயல்கள் போன்றவற்றின் உறுப்புகளும் விற்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அந்தக் கடல் உணவுச் சந்தைக்கு அச்சிறுமி செல்லவில்லை என்பதைச் சுகாதார அமைச்சு சுட்டியது.

வூஹானில் குறைந்தது 44 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பதினொரு பேருக்கு கடுமையான உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டில் சிங்கப்பூரைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கிய ‘சார்ஸ்’ நோய்த் தொற்றை இச்சம்பவம் நினைவுபடுத்துகிறது.

வூஹான் நகரிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளைப் பரிசோதிக்க சாங்கி விமான நிலையத்தில் உடல் வெப்பநிலை பரிசோதனை முறையை சிங்கப்பூர் தொடங்கிவிட்டது.

இந்நிலையில், மனிதர்களுக்கு இடையே வூஹான் கிருமி தொடர்பிலான நிமோனியா காய்ச்சல் தொற்றுவதற்கான தகவல்கள் இல்லை எனச் சுகாதார நிபுணர்கள் கருத்துரைத்தனர்.

வூஹானில் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ள வேளையில், அங்குள்ள நிலைமையை சிங்கப்பூர் அணுக்கமாக கண்காணித்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று முன்தினம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

“2003ல் சார்ஸ் நோய் பரவியதைத் தொடர்ந்து, நோய்ச் சம்பவங்கள் குறித்து நாம் மெத்தனமாக இருந்துவிட முடியாது,” என்றார் அவர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon