மிடில் ரோட்டில் அமைந்திருக்கும் ‘பண்டோரா கிளப் அண்ட் கேடிவி’ எனப்படும் கேளிக்கைக் கூடத்தில் தீப்பற்றியது.
அந்த விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சுமார் 60 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
காலை 11.15 மணியளவில் இந்தச் சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. 114 மிடில் ரோடு முகவரியில் இருக்கும் லீ காய் ஹவுசின் நான்காவது மாடியில் இந்த கேளிக்கைக் கூடம் அமைந்துள்ளது.
தீ கொழுந்துவிட்டு எரிந்ததாகவும் கரும்புகை படர்ந்ததாகவும் கூறப்பட்டது.
ஒன்பது அவசர வாகனங்களுடன் 30 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இரண்டு தண்ணீர்க் குழாய்களைப் பயன்படுத்தி தீ அணைக்கப்பட்டது.
மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கூடத்தின் உட்புறத்தைக் காட்டும் 37 வினாடிகளுக்கான காணொளியை படை வெளியிட்டது.
அங்கிருந்தோரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் உதவ போலிசாரின் உதவி முன்னதாக நாடப்பட்டது.
புகையை சுவாசித்ததன் தொடர்பில் ஒரு பெண் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தீயணைக்கும் பணியில் ஈடுபட்டபோது சுவாசக் கருவிகளை அதிகாரிகள் பயன்படுத்தினர். தீப்பற்றியதற்கான காரணம் குறித்த விசாரணை நடைபெறுகிறது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity