பொய்ச்செய்திக்கு எதிரான சிங்கப்பூரின் சட்டம், பொய்யுரை கூறப்படுவதிலும் அது பொதுமக்களின் நலனைப் பாதிக்கும் வகையில் உள்ளதா என்பதை மட்டும் பார்க்குமே தவிர, அந்தப் பொய்ச்செய்திக்குக் காரணமானவர்களையோ அமைப்புகளையோ பார்த்து நடவடிக்கை எடுக்காது என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
உண்மையில் பார்த்தால், பொஃப்மா எனும் பொய்ச்செய்திக்கும் சூழ்ச்சித்திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்டம் முதல் முறையாக அரசியல்வாதிகளாக இருக்கும் தனிநபர்களுக்கு எதிராகவும் அரசியல் கட்சிகளுக்கும் எதிராகவும் பாய்ந்தது.
அந்தத் அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் தாங்கள் சொன்ன பொய்யான கருத்துகளுக்குத் திருத்தக் குறிப்பு இடுமாறு உத்தரவிடப்பட்டது.
அதனால்தானோ என்னவோ, பொஃப்மா சட்டம் அந்தப் பிரிவினருககு எதிராக மட்டும் பயன்படுத்தப்படுகிறது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது என்று அமைச்சர் நேற்று நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
“ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், அந்தப் பொய்ச்செய்தி எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஆராய்ந்து, பின்னர் அதற்குத் தகுந்த பதிலடி என்ன என்பதை முடிவெடுத்து, அதை செயல்படுத்த தயாராக இருக்க வேண்டும்.
“அப்படி செய்பவர்கள் அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர்களாக இருக்கும் பட்சத்தில், அது அவர்களின் செயல்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையாக மட்டும்தான் இருக்கும்,” என்றார் அமைச்சர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி அமல்படுத்தப்பட்டதில் இருந்து நான்கு முறை பயன்படுத்தப்பட்ட பொஃப்மா சட்டம் பற்றி நியமன உறுப்பினர்கள் ஆந்தியா ஓங், வால்டர் திசேரா இருவரின் கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
நான்கில் மூன்று சம்பவங்கள் எதிர்க்கட்சி அல்லது அதன் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டவை. சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, மக்கள் குரல் கட்சியின் தலைவர் திரு லிம் தியேன், சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் உறுப்பினர் திரு பிராட் போவ்யர் ஆகியோர் அந்த மூன்று சம்பவங்களில் சம்பந்தப்பட்டிருந்தனர்.
நான்காவது சம்பவத்தில், ஸ்டெய்ட்ஸ் டைம்ஸ் ரிவியூ இணையத்தள நிறுவனர் திரு அலெக்ஸ் டான், பதிவிட்ட ஃபேஸ்புக் பதிவில் திருத்தக் குறிப்பை இட உத்தரவிடப்பட்டது.
இந்த நான்கு சம்பவங்களிலும் சிங்கப்பூரர்கள் தொடர்பான விவகாரங்கள் பற்றிய பொய்யான தகவல்கள் இருந்தன என்று சுட்டிய திரு ஈஸ்வரன், “பொதுமக்கள் நிதியை அரசாங்கம் தவறான வழியில் பயன்படுத்தியுள்ளது, போலிஸ் அதிகாரிகள் தவறாகக் கையாளப்பட்டனர், வெளிநாட்டினருக்குச் சாதகமாக சிங்கப்பூரர்களுக்கு எதிராக அரசாங்கம் செயலாற்றியது என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.
“இப்படிப்பட்ட பொய்யான தகவல்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், அவை சிங்கப்பூரின் அமைப்புகள் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அவை கீழறுத்துவிடும்.
“இதுவரை பொஃப்மா தொடர்பிலான நான்கு சம்பவங்களிலும் திருத்தத் குறிப்புகள் இடுமாறு உத் தரவிடப்பட்டுள்ளது. மேலும் தவறான செய்திக்குப் பக்கத்தில் சரியான தகவலும் இடம்பெறச் செய்தால் மக்களுக்கும் அது தெளிவாகப் புரியும்,” என்றார் அவர்.