2020ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி குறித்து அரசாங்கம் நம்பிக்கையுடன் இருக்கும்போதிலும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு வருவதாக வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
உலகளாவியப் பொருளியல் நிச்சயமற்ற சூழ்நிலையை எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
அதில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவும் ஒன்று என்றார் அவர். இந்த இரு நாடுகளுக்கிடையிலான உறவு சிங்கப்பூருக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் முக்கியமானது என்று திரு சான் கூறினார்.
அண்மையில் அறிவிக்கப்பட்ட முதல் கட்ட அமெரிக்க - சீனா வர்த்தக ஒப்பந்தம் அனைத்து நாடுகளின் பொருளியலுக்கும் நன்மை அளிக்கும் என்றார் அமைச்சர் சான்.
குறைந்து வரும் உள்ளூர் நிறுவனங்களின் ஏற்றுமதி, சிங்கப்பூர் வர்த்தகங்களையும் ஊழியர்களையும் எவ்வாறு பாதிக்கிறது என்று பீஷான்-தோ பாயோ குழுத் தொகு்தி நாடாளுமன்ற உறுப்பினர் திரு சக்தியாண்டி சுபாட் எழுப்பிய கேள்விக்குத் திரு சான் பதிலளிக்கும் விதமாக இது அமைந்தது.
பிரெக்சிட் சிங்கப்பூரை ஒரளவுக்குத்தான் பாதிக்கும் என்றார் திரு சான். ஆனால் அடுத்த சில வாரங்களில் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் எடுக்கும் முடிவைப் பொறுத்து பிரெக்சிட் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து தெளிவாகத் தெரியும் என்றார் அவர்.
கடந்த ஆண்டில் உலக நாடுகளின் பொருளியல் வெகுவாக பாதிக்கப்பட்டது. சிங்கப்பூருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. சிறிய, வெளிப்படையான பொருளியலைக் கொண்டுள்ள சிங்கப்பூர், பரந்த பொருளியல் நிலைகளால் பாதிக்கப்பட்டது. சிங்கப்பூரின் பொருளியல் கடந்த ஆண்டு 0.7 விழுக்காடு உயர்ந்ததாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில் கண்ட 3.1 விழுக்காடு வளர்ச்சியைவிட இது குறைவு. ஆனால் மின்னிலக்கப் பொருளியல் போன்ற துறைகள் மூலம் சிங்கப்பூருக்கு நல்ல வாய்ப்புகள் இருப்பதாக திரு சான் தெரிவித்தார்.
ஆசியாவின் பொருளியல் 5.1 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் பொருளியல் 0.5 விழுக்காட்டிலிருந்து 2.5 விழுக்காடு வரை உயரும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு எதிர்பார்க்கிறது. இவை ஒருபுறம் இருக்க, சிங்கப்பூரின் பொருளியலை விரிவுபடுத்தவும் வேலைகளை உருவாக்கவும் சிங்கப்பூர் அரசாங்கம் சில உத்திகளை நடைமுறைப்படுத்திஉள்ளதாக அமைச்சர் கூறினார்.
உலகளாவிய நிச்சயமற்றத்தன்மை அச்சுறுத்தும்போதும் சிங்கப்பூரின் தனித்தன்மையைக் காட்ட அதன் அடிப்படைகள் வலுவாக்கப்படுவதும் இதில் அடங்கும் என்று திரு சான் தெரிவித்தார். இதை அனைத்துலகச் சமூகம் உணர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட திரு சான், மின்னனுவியல், விமானத்துறை, மருந்து உற்பத்தி ஆகியவற்றில் $8 பில்லியனுக்கும் அதிகமான மூதலீட்டை சிங்கப்பூர் கடந்த ஆண்டு ஈர்த்ததாகக் கூறினார். சிங்கப்பூர் நிறுவனங்களும் ஊழியர்களும் அனைத்துலக அளவில் செயல்பட உதவிகள் கிடைப்பதாகவும் திரு சான் தெரிவித்தார்.
சந்தை தயார்நிலை உதவித் திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கும் செப்டம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வெளிநாடுகளில் வர்த்தகம் செய்ய ஏறத்தாழ 800 சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் வர்த்தக ரீதியாக வளர்ச்சி பெற ஏறத்தாழ 1,700 நிறுவனங்களுக்கு ஆதரவு கிடைத்தது.