பிரின்செப் ஸ்திரீட்டில் உள்ள மதுக்கூடம் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) ஆடவர் ஒருவர் இரண்டு பெண்களிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும் அவர்கள் அந்த ஆடவரின் நடவடிக்கையை நிராகரித்ததையடுத்து, அந்த ஆடவர் தனது முழங்கையால் அவ்விரு பெண்களில் ஒருவரது தாடையை உடைத்ததாகவும் கூறப்படுகிறது.
வேண்டுமென்றே காயம் விளைவித்ததற்காக அந்த 25 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக தி நியூ பேப்பர் குறிப்பிட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணான திருவாட்டி கைலி, சம்பவம் தொடர்பிலான காணொளி ஒன்றை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த சனிக்கிழமை பதிவிட்டார்.
ஆறு ஆடவர், ஐந்து பெண்கள் பேசிக்கொண்டிருப்பதையும், ஒரு ஆடவர் பெண்ணின் முகத்தில் முழங்கையால் இடிப்பதையும் காணொளி காட்டியது.
வெளிநாட்டில் படித்துக்கொண்டிருக்கும் சிங்கப்பூர் நிரந்தரவாசியான திருவாட்டி கைலி, கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு குடும்பத்தாரையும் நண்பர்களையும் பார்க்க இங்கு வந்திருந்தார்.
அந்த ஆடவர் தம்மையும் தமது தோழியையும் தொந்தரவு செய்தது மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக அவர் தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
தங்களிடமிருந்து விலகிச் செல்லுமாறு பலமுறை எச்சரித்தும் கேளாத அந்த ஆடவர் திடீரென தாக்கியதில் தனது தாடை உடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
சம்பவத்தின்போது அங்கிருந்தோர் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக, பாதுகாப்பாக நடந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அவேர் அமைப்பின் பராமரிப்புச் சேவைகளின் தலைவரான திருவாட்டி அனிஷா ஜோசஃப், “தங்களைத் தாக்கும் வேற்று மனிதர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வது பெண்களின் கடமை என்று கூறுவது மட்டும் போதாது. இத்தகைய அபாயகரமான, வன்முறையான நடவடிக்கையைச் செய்வதைத் தடுத்து நிறுத்துவது எப்படி என்பதைப் பற்றியும் விவாதிக்க வேண்டும்,” என்றார்.
இந்த வழக்கில் காணொளி ஆதாரம் இருப்பதைச் சுட்டிக்காட்டிய வழக்கறிஞர் குளோரியா ஜேம்ஸ் சிவெட்டா, “அமைதியாக இருந்தால் அது சம்மதத்துக்கு அறிகுறியல்ல,” என்றார்.
வெளிப்படையாக சம்மதம் தெரிவிக்காதவரை எதையும் ‘சம்மதம்’ என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்றார் அவர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity