பிரைவேட் ஜோஷுவா குவேக் தனது அடிப்படை வான்குடை பயிற்சியின்போது ஐந்தாவது, இறுதி முறையாகக் குதித்தபோது, வான்குடையிலிருந்து விமானத்துடன் இணைக்கப்பட்ட கயிறு இடையூறு ஏற்படுத்தியது.
விமானத்திலிருந்து குதித்தபோது அந்தக் கயிறு அவரது கழுத்தைச் சுற்றி நெரித்தது. அதனால், 21 வயது குவேக் தரையில் பத்திரமாக இறங்கினாலும் அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி நடைபெற்ற இந்த விபத்து, 1974க்குப் பிறகு நிகழ்ந்து உள்ள முதல் சம்பவம் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹெங் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து அல்ஜுனிட் குழுத் தொகுதி உறுப்பினர் பிரித்தம் சிங் கேள்வி எழுப்பியிருந்ததற்கு அமைச்சர் பதிலளித்தார்.
சிங்கப்பூர் ஆயுதப்படை ஓவ்வோர் ஆண்டும், கயிற்றுடன் இணைக்கப்பட்ட சுமார் 6,000 வான்குடை குதிப்புகளை நடத்துகிறது.
1974ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சிங்கப்பூர் ஆயுதப்படையின் வான்குடை பயிற்சியில் பங்கேற்று 27,000 வீரர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அமைச்சர் கூறினார்.
“விமானத்துடன் இணைக்கப்பட்ட கயிறு, குதிப்பவருக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்வதற்கு குதிப்பவருக்கும் வான்குடை பயிற்றுவிப்பாளருக்கும் பாதுகாப்பு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
“எல்லா குதிப்புகளின்போதும், தகுதிபெற்ற வான்குடை குதிப்பு பயிற்றுவிப்பாளரும் இரு மூத்த பயிற்றுவிப்பாளர்களும் விமானத்தில் இருப்பார்கள்,” என்றும் டாக்டர் இங் விவரித்தார்.
“விபத்து நடப்பதற்கு முன்னர் பிரைவேட் குவேக் நான்கு முறை இவ்வாறு வானத்திலிருந்து வான்குடை மூலம் குதித்துள்ளார். மேலும், குதிப்பதற்கு முன் அவர் தேவைப்பட்ட அனைத்து வான்குடை பயிற்சிக்கும் பாதுகாப்பு பயிற்சிக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்,” என்றும் அமைச்சர் சொன்னார்.
தரையில் வந்து சேர்ந்த பிறகு குவேக் உடனடியாக பயிற்சி இடத்தில் இருந்த மருத்துவ அதிகாரியிடம் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் அருகில் உள்ள நகரத்தின் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு எம்ஆர்ஐ சோதனை செய்து பார்த்ததில் குவேக்குக்கு முதுகு எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. அடுத்த நாள் காலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
முதுகு எலும்புத் தண்டை மேலும் நிலைப்படுத்துவதற்கு அவருக்கு இரண்டாவது அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
பிரைவேட் குவேக்கின் நிலைமை தற்போது சீராக உள்ளது என்றும் அடுத்த சில வாரங்களுக்கு அவர் மருத்துவமனையில் அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவார் என்றும் கூறிய அமைச்சர், சிங்கப்பூருக்கு அவர் திரும்பலாம் என்று அங்குள்ள மருத்துவர்கள் உறுதி தெரிவித்தவுடன் அவர் சிங்கப்பூருக்கு அழைத்து வரப்படுவார் என்றும் கூறினார்.
“சிங்கப்பூர் ராணுவப்படை இச்சம்பவம் குறித்து முழு அளவிலான விசாரணை நடத்த, சிங்கப்பூர் ஆயுதப்படையின் தலைமைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் ஆதரவுடன் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
“இதற்கிடையே, கயிற்றுடன் கூடிய வான்குடை பயிற்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
“நடப்பில் உள்ள அனைத்து பாதுகாப்புக் கோட்பாடுகளும் பாதுகாப்பு விதிமுறைகளும் இந்த விசாரணையில் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும்,” என்றும் தற்காப்பு அமைச்சர் இங் தமது எழுத்துபூர்வ பதிலில் விளக்கினார்.