ஐந்து மின்னிலக்க வங்கி சேவை உரிமங்களுக்கு 21 விண்ணப்பங்கள்

ஐந்து மின்னிலக்க வங்கி சேவை உரிமங்களுக்கு 21 விண்ணப்பங்கள்

1 mins read
e9e7664d-b392-43fb-ad32-65dc6958a04d
மின்னிலக்க வங்கி சேவை உரிமங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் நேற்று தெரிவித்தது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

எதிர்கால போட்டிக்குத் தயாராகும் வகையில் வங்கித் துறை கட்டுப்பாடுகளைத் தளர்த்தி ஐந்து மின்னிலக்க வங்கி சேவைகளுக்கான உரிமங்களை வழங்க சிங்கப்பூர் நாணய ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்த நிலையில் 21 நிறுவனங்கள் மின்னிலக்க வங்கி சேவைக்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளன.

சில்லறை மற்றும் நிறுவனங்களுக்கு சேவையாற்றும் இரண்டு மின்னிலக்க முழுமையான வங்கி உரிமத்துக்கு ஏழு விண்ணப்பங்களும் மூன்று ஒட்டுமொத்த வங்கி உரிமத்துக்கு 14 விண்ணப்பங்களும் வந்துள்ளதாக நேற்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்தது.

இதில் தேர்வு பெற்ற நிறுவனங்களின் விவரம் இவ்வாண்டு ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மின்னிலக்க வங்கி சேவைக்கு மின் வர்த்தகம், தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு போன்ற பரந்த அளவிலான நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் பெரும்பாலான விண்ணப்பங்கள் கூட்டாக சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையம் கூறியது. ஆனால் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்துள்ள நிறுவனங்களின் பெயர்களை அது வெளியிடவில்லை.

கடந்த 2019ஆம் ஆண்டு மின்னிலக்க வங்கிச் சேவைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டன. கிராப்-சிங்டெல் கூட்டாகவும் ரேசர் தலைமையில் கூட்டு நிறுவனமும் தெமாசெக்கின் ஹெலிகோனியா, சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம், ஃபார் ஈஸ்ட் நிறுவனம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஓசிம் நிறுவனரான ரோன் சிம் தலைமையிலான மற்றொரு குழுமமும் சீனாவின் பெரும் செல்வந்தரான ஜாக் மாவின் 'ஆன்ட் ஃபினான்சியல்' நிறுவனமும் மின்னிலக்க சேவைக்கு விண்ணப்பம் செய்துள்ளன.