மலேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், சிங்கப்பூர் கார்களில் வாகன நுழைவு அனுமதி பட்டைகளைப் பொருத்தும் பணி எளிமையாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
'விஇபி-ஆர்எஃப்ஐடி' பொருத்த எளிமையான வழிகள் ஆறு மாதங்களில் கண்டறியப்படும் என்றார் அவர்.
"தற்போதைய சூழ்நிலையில் மலேசிய வாகன அனுமதி முறை அமலாக்கப்பட்டால் பிரச்சினையில் முடியும். இதனால் எளிமையான வழிகள் கண்டறியப்பட்டு இவ்வாண்டின் இரண்டாவது பாதியில் நடை முறைப்படுத்தப்படும்," என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ஏராளமான வாகனங்களில் 'ஆர்எஃப்ஐடி' எனும் ரேடியோ அலைவரிசை அடையாளப் பட்டையைப் பொருத்த வேண்டியிருப்பதால் ஜோகூரின் சுல்தான் இஸ்கந்தர் கட்டடத்தையும் சுல்தான் அபு பக்கர் வளாகத்தையும் பயன்படுத்தும் அனைத்து வெளிநாட்டு வாகனங்களுக்கும் வாகன நுழைவு அனுமதி முறையை ஒத்தி வைப்பதாக கடந்த வாரம் மலேசியா அறிவித்தது.
வாகன அனுமதி முறைக்கு 230,000 சிங்கப்பூர் வாகனங்கள் பதிவு செய்துள்ளன. ஆனால் 60,000 வாகனங்களில் மட்டுமே ஆர்எஃப்ஐடி பொருத்தப்பட்டுள்ளதாக மலேசிய சாலைப் போக்கு வரத்து இயக்குநர் ஜெனரல் ஷஹாருடீன் காலித் கூறினார்.
இதற்கிடையே ஜோகூருக்கு ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட கார்கள் வருவதாக அமைச்சர் லோக் தெரிவித்தார்.
உட்லண்ட்ஸ் கடற்பாலத்தின் அருகே ஜோகூரில் சுல்தான் இஸ்கந்தர் கட்டடம் அமைந்துள்ளது. துவாஸ் இரண்டாவது பாலத்தின் ஜோகூர் பக்கத்தில் சுல்தான் அபுபக்கர் வளாகம் இடம்ெபற்றுள்ளது.