பணப்பையை ஒப்படைக்க 200 கி.மீ. பயணம்

பணப்பையை ஒப்படைக்க 200 கி.மீ. பயணம்

2 mins read
b378c03f-110c-4879-ab4b-702a356cde82
பணப்பையை ஒப்படைப்பதற்காக சதீஷ் மலாக்காவிலிருந்து 200 கி.மீ. பயணம் செய்து ஜோகூர் பாருவுக்கு வந்தது பின்னர் தெரியவந்தது. படம்: JB TRACER -

சிங்கப்பூரைச் சேர்ந்த கார்னே மாக், மனிதாபிமானத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கை வீண்போகவில்லை.

ஆம். மாக் தொலைத்த பணப்பையை 200 கி.மீ. தூரம் பயணம் செய்து வந்து கொடுத்துள்ளார் மலேசியாவைச் சேர்ந்த கிராப் ஓட்டுநர் சதீஷ் கருப்பசாமி.

ஜோகூர் பாருவில் கடந்த சனிக்கிழமை (ஜனவரி 4) கிராப் டாக்சி ஒன்றில் பயணம் செய்தார் மாக். அப்போது தனது பணப்பையை தவறவிட்டார் அவர்.

ஆனால் அதனை அவர் கவனிக்கவில்லை. பின்னர் இரவு உணவுக்கு பணம் கொடுப்பதற்காக பணப்பையைத் தேடியபோதுதான் அது தொலைந்துபோனது அவருக்குத் தெரியவந்தது.

உடனடியாக, கிராப் நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்த மாக், ஜோகூர் பாருவிலிருந்து சிங்கப்பூருக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது கிராப் ஓட்டுநரிடமிருந்து குறுந்தகவல் ஒன்றைப் பெற்றார்.

அதில், தனது வாகனத்தைச் சோதனையிட்ட பின்னர் தகவல் தெரிவிப்பதாக கிராப் ஓட்டுநரான சதீஷ் தெரிவித்திருந்தார்.

மற்றொரு குறுந்தகவலில், தனது காரில் மாக்கின் பணப்பை இருந்ததை சதீஷ் உறுதிசெய்தார்.

அடுத்த நாள் மாலை இருவரும் ஜோகூர் பாருவில் சந்தித்து பணப்பையை ஒப்படைப்பதாக முடிவாயிற்று.

பணப்பையை ஒப்படைப்பதற்காக சதீஷ் மலாக்காவிலிருந்து 200 கி.மீ. பயணம் செய்து ஜோகூர் பாருவுக்கு வந்தது பின்னர் தெரியவந்தது.

தனது பணப்பையில் இருந்த அனைத்தும் அப்படியே இருந்தது என்றார் மாக்.

இதனால் நெகிழ்ந்துபோன மாக், சதீஷைப் பாராட்டும் விதத்தில் தனது சொந்த செலவில் சதீஷ் அவரது குடும்பத்துடன் ஒரு வாரம் சிங்கப்பூரில் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

சீனப் புத்தாண்டு காலத்தில் சதீஷ் குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு வருவார் என்று தெரிகிறது.

இந்தத் தகவல்கள் JB TRACER (Johor Bahru Traffic, Crime & Community Service Report) ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity