விமானம் ஒன்றில் பராமரிப்புப் பணிகளைச் செய்துகொண்டிருந்தபோது தவறி விழுந்த 63 வயது சிங்கப்பூரர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இந்த விபத்து கடந்த மாதம் 22ஆம் தேதி நிகழ்ந்தது.
எஸ்ஐஏஇசி எனப்படும் 'எஸ்ஐஏ எஞ்சினியரிங்' கம்பெனியின் ஊழியர் ஒருவர் 31 ஏர்லைன் ரோட்டில் உள்ள தளத்தில் விமானம் ஒன்றின் பராமரிப்புப் பணியை மேற்கொண்டிருந்தபோது உயரத்திலிருந்து கீழே விழுந்ததாக மனிதவள அமைச்சு நேற்று தி நியூ பேப்பர் நாளிதழிடம் தெரிவித்தது.
ராஃபிள்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், இரு வாரங்களுக்குப் பிறகு காயங்கள் காரணமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட மனிதவள அமைச்சு, எஸ்ஐஏஇசி நிறுவனம் அதன் வேலை நடைமுறைகள், அபாயக் கட்டுப்பாடு ஆகியவற்றை உடனடியாக மறுஆய்வு செய்து அதிலிருக்கும் குறைபாடுகளை சரிசெய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 9 வேலையிட மரணங்கள் நிகழ்ந்தன. கடந்த ஆண்டின் கடைசி இரண்டு மாதங்களில் 12 வேலையிட மரணங்கள் சம்பவித்தன.
கடந்த மாதம் 23ஆம் தேதி பொருள் சேமிப்புக் கிடங்கில் ஊழியர் ஒருவர் மேலே பொருட்கள் விழுந்ததால் அவர் இறந்தார்.
நிலம் அகழும் இயந்திரம் ஒன்றின் 'டிராக் ஷூ' எனும் பாகத்தை மீண்டும் இணைக்கும்போது ஏற்பட்ட விபத்தில் மற்றோர் ஊழியர் டிசம்பர் 20ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் எண் 10 சிலேத்தார் நார்த் லிங்க்கில் நிகழ்ந்தது. அது குறித்து அன்று பிற்பகல் 2 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
'எங் ஜூ கன்ஸ்ட்ரக்ஷன்' நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டிருந்த அந்த 36 வயது இந்திய நாட்டவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் கடந்த 26ஆம் தேதி அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
நவம்பர் மாதத்தில் பல வேலையிட மரணங்கள் சம்பவித்ததன் தொடர்பில் தஞ்சோங் பகார் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங், கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
வழக்கத்துக்கு மாறாக பலர் உயிரிழந்தது கவலை அளிப்பதாக மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ, தனது எழுத்துபூர்வ பதிலில் குறிப்பிட்டார். சிங்கப்பூர் ஒப்பந்ததாரர்கள் சங்கம், வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார மன்றம் ஆகியவற்றுடன் மனிதவள அமைச்சு இணைந்து பணியாற்றி இத்தகைய விபத்துகளைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
வேலையிடங்களைப் பார்வையிடுதல், சாதனங்களை ஆய்வு செய்தல் போன்ற நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த நவம்பரில் நிகழ்ந்த ஒன்பது வேலையிட மரணங்களில் நான்கு கட்டுமானத் துறை சார்ந்தவை. இரண்டு சம்பவங்கள் கடற்துறையிலும் இரண்டு சம்பவங்கள் சேவைத்துறையிலும் மேலும் ஒன்று உற்பத்தித் துறையிலும் நிகழ்ந்தன.
கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக மாதத்திற்கு நான்கு வேலையிட விபத்துகள் நிகழ்ந்தன.

