ஆறாண்டுகள் தடுப்புக்காவலுக்குப்பின் விடுதலை

ஆறாண்டுகள் தடுப்புக்காவலுக்குப்பின் விடுதலை

2 mins read
5a2e7520-ded9-4703-adf2-3f0ca8dfbf9d
2015ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படம், உச்சநீதிமன்ற வளாகத்தைவிட்டு டான் டான் சீட் எங் (நடுவில்) வெளியேறுவதைக் காட்டுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அனைத்துலக காற்பந்தாட்ட முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயிக்கும் கும்பலுக்குத் தலைவரான டான் டான் சீட் எங், 55, கடந்த மாதம் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை எதுவுமின்றி 2013ஆம் ஆண்டு அக்டோபரிலிருந்து தடுத்துவைக்கப்பட்டிருந்தார் டான்.

ஆட்ட முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயிக்கும் கும்பலின் தலைவர் என முன்னதாக இவரை அனைத்துலக போலிஸ் அமைப்பு (இன்டர்போல்) வர்ணித்திருந்தது.

ஐரோப்பா, ஆப்பிரிக்கா, துருக்கியில் காற்பந்து ஆட்ட முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயித்ததாகக் கூறப்படுவதன் தொடர்பில், குற்றவியல் (தற்காலிகச் சட்டப்பிரிவுகள்) சட்டத்தின்கீழ் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக டான் சிறையில் வைக்கப்பட்டார்.

கடந்த மாதம் 2ஆம் தேதி டான் விடுவிக்கப்பட்டதையும் போலிஸ் கண்காணிப்பு உத்தரவின்கீழ் அவர் வைக்கப்பட்டிருப்பதையும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் உள்துறை அமைச்சு நேற்று உறுதிப்படுத்தியது.

"தடுப்புக்காவலில் டான் வைக்கப்பட்டிருந்த காலம், கடந்தகால குற்றவியல் நடவடிக்கைகளில் அவரது ஈடுபாடு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது அவரது நடத்தை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கருத்தில்கொண்ட பிறகே அவரை விடுவிக்க முடிவெடுக்கப்பட்டது," என்று உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

போலிஸ் கண்காணிப்பு உத்தரவை டான் மீறினாலோ அல்லது மீண்டும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அப்பேச்சாளர் எச்சரித்தார்.

ஆட்ட முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயித்ததன் தொடர்பில் 2013ஆம் ஆண்டு செப்டம்பரில் டானும் மற்ற 13 பேரும் கைது செய்யப்பட்டனர்.

2015ஆம் ஆண்டில் டானை பிரதிநிதித்து வாதிட்ட வழக்கறிஞர்கள் தோங் சீ குன், ஹமிதுல் ஹக், "நீண்டகாலமாக தடுப்புக்காவலில் இருந்த அவர் தற்போது வாழ்க்கையைப் புதிதாக தொடங்க விரும்புகிறார்," என்று கூறினர்.