பள்ளிவாசல் நிதியைக் கையாடியவருக்கு ஒன்பது மாதச் சிறை

பள்ளிவாசல் நிதியைக் கையாடியவருக்கு ஒன்பது மாதச் சிறை

2 mins read
429e0c67-d545-4ce9-8b64-20acf9ab65de
-

ஜாலான் யூனோஸ் வட்டாரத்தில் உள்ள தாருல் அமான் பள்ளிவாசலில் நன்கொடை பணம், சமய வகுப்புகளுக்கான கட்டணம் போன்றவற்றைப் பெறுவதற்கான முக்கிய பொறுப்பு, பள்ளிவாசல் ஊழியர் மர்லினா அப்துல் ரஹ்மானிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

ஆனால், தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பைத் தவறாகப் பயன்படுத்திய அவர், கிட்டத்தட்ட $38,000 பணத்தைக் கையாடினார்.

2017ஆம் ஆண்டு மார்ச் முதல் கடந்த ஆண்டு ஜூலை வரை அவர் இக்குற்றத்தைப் புரிந்தார்.

கிட்டத்தட்ட $15,000யை கையாடியதன் தொடர்பில் நம்பிக்கை மோசடி புரிந்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு நேற்று ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

எஞ்சிய தொகையை அவர் கையாடியதன் தொடர்பில் இரு குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிப்பதில் கருத்தில் கொள்ளப்பட்டன.

தாம் கையாடிய தொகையில் $4,800யை மர்லினா திரும்ப வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரை பள்ளிவாசலில் பணியாற்றிய மர்லினா, 36, அங்கு பணியைத் தொடங்கிய இரண்டே மாதங்களில் குற்றம் புரியத் தொடங்கினார்.

பள்ளிவாசல் பொறுப்பில் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பணத்தைக் குடும்பச் செலவு உள்ளிட்ட பல்வேறு காரியங்களுக்காக மர்லினா முறைகேடாக செலவிட்டதாக அரசாங்கத் தரப்பு துணை வழக்கறிஞர் சுஹாஸ் மல்ஹோத்ரா நீதிமன்றத்தில் கூறினார்.

மர்லினாவின் குற்றச்செயல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிச்சத்திற்கு வந்தது.

ஹஜ்ஜுப் பெருநாள் தருணத்தில் பெறப்பட்ட பணத்தில் $4,800 குறைவதை தாருல் அமான் பள்ளிவாசலின் நிறுவன, சொத்துரிமை மேலாளர் ஃபர்லிடா முகம்மது அப்போது கண்டறிந்தார்.

அதையடுத்து, பள்ளிவாசல் நிர்வாகத்தினர் நடத்திய முழு விசாரணையில் மர்லினா முறைகேடு செய்தது தெரியவந்தது.

சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்துடன் (முயிஸ்) தாருல் அமான் பள்ளிவாசல் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி போலிசிடம் புகார் அளிக்கப்பட்டது.

தனது கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் பள்ளிவாசல்களில் நிதி முறைகேடு நடப்பதைத் தான் கடுமையாக கருதுவதாக முயிஸ் தெரிவித்தது.

பள்ளிவாசல்களில் சிறந்த நிர்வாகம் இருப்பதை உறுதிசெய்ய உரிய கொள்கைகளும் நடைமுறைகளும் நடப்பில் இருப்பதாக அது கூறியது.

இந்த வழக்கில் மர்லினாவைப் பிரதிநிதித்து வழக்கறிஞர் எவரும் வாதிடவில்லை.