கையூட்டு கொடுத்ததாக ஐவர் மீது குற்றச்சாட்டு

கையூட்டு கொடுத்ததாக ஐவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
f15209be-60d7-4d5d-b149-6a65f5241dd6
-

வாகனக் கடை ஒன்றின் மேலாளர்களுக்கு $600,000க்கும் அதிகமாக கையூட்டு கொடுத்ததாக கார் பாகங்களை விற்கும் நிறுவனத்தின் இயக்குநர்கள் மூவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

'நியூ லிங்க் ஆட்டோ டிரேடிங்' நிறுவன இயக்குநர்களான இங் கியாம் கியட், 54, வூ குவோக் வெங், 75, சான் மியாவ் ஹூன், 54, ஆகிய அந்த மூவரும் 'ஆட்டோபெக்ஸ் வெஞ்சர் சிங்கப்பூர்' கடையின் இரு மேலாளர்களுக்கு கையூட்டு வழங்கியதாகக் கூறப்படுகிறது.

'நியூ லிங்க்' நிறுவனத்தில் கார் பாகங்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், அங்கு செல்லும் வாடிக்கையாளர்களின் கார்களை முழுமையாகப் பரிசோதிக்க 'ஆட்டோபெக்ஸ் வெஞ்சர்' கடையின் வாகனப் பழுதுபார்ப்புப் பணியாளர்களை உத்தரவிடுமாறு அந்தக் கடை மேலாளர்களை 'நியூ லிங்க்' நிறுவன இயக்குநர்கள் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதற்குக் கைமாறாக அந்த இயக்குநர்கள் மூவரும் அவ்விரு மேலாளர்களுக்குக் கையூட்டு வழங்கியதாகச் சொல்லப்படுகிறது.

இங், வூ, சான் ஆகிய இயக்குநர்கள் மூவரும் ஊழல் தொடர்பில் தலா ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர்.

கையூட்டு பெற்றதாக 'ஆட்டோபெக்ஸ் வெஞ்சர்' கடையின் மேலாளர்கள் இருவரும் தலா ஐந்து குற்றச்சாடுகளை எதிர்நோக்குகின்றனர்.

இயோ பூன் லெங், 47, வோங் சென் கியோங், 42, ஆகிய அவ்விருவரும் 2013க்கும் 2017ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் மொத்தம் $603,883 கையூட்டு பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஐவரும் $50,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அடுத்த மாதம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர்.