சிங்கப்பூரில் உள்ள வங்கியில் கணக்கு தொடங்குவதற்கு போலி தகவல்களைச் சமர்ப்பித்ததற்காக இந்திய ஆடவருக்கு 10 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வங்கிக் கணக்கின் மூலம் சிங்கப்பூரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக நேற்று போலிசார் வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது.
V2P Solutions நிறுவனத்தில் பணிபுரியும் கிரசில்ஸ் ஃபிரெட்ரிக் பேட்ஜஸ் என்பவர் கடந்த திங்கட்கிழமை இந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அந்நிறுவனத்துக்காக இந்தியாவில் கிரசில்ஸ் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது, செயல்படாத நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வங்கிக் கணக்குகளை விற்பனை செய்யும் வேலையில் அவர் ஈடுபட்டார்.
புதிதாக அமைக்கப்பட்ட நிறுவனங்களின் இயக்குநராகப் பணிபுரியவும் அந்த நிறுவனங்களின் பேரில் வங்கிக் கணக்குகள் தொடங்கவும் உள்ளூர்வாசிகளை அவர் பணிக்கு அமர்த்தினார்.
குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு அந்த இயக்குநர்கள் பின்னர் அந்த வங்கிக் கணக்குகளின் கட்டுப்பாட்டை வேறு ஒருவருக்கு வழங்குவர்.
V2P Solutions நிறுவனம், செயல்படாத நிறுவனங்களையும் அவற்றின் வங்கிக் கணக்குகளையும் விற்கும் நிறுவனம் என்பதையும் பின்னர் அந்தக் கணக்குகள் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதையும் கிரெசில்ஸ் புரிந்ததாக போலிஸ் அறிக்கை தெரிவித்தது.
அந்த வகையில், ஜாதவ் விஷால் விஜயகுமார் என்பவரை 'மூர் பிரைவேட் லிமிட்டெட்' எனும் நிறுவனத்தின் இயக்குநராக கிரெசில்ஸ் நியமித்தார். சிங்கப்பூரில் அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கைத் தொடங்குமாறு விஷால் பணிக்கப்பட்டார்.
இந்தக் குற்றத்தைப் புரிவதற்காக அவர்கள் இருவரும் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 25 முதல் 29ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூருக்கு வந்தனர்.
2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி கிரெசில்ஸ் விஷாலுடன் சிங்கப்பூரில் உள்ள யூஓபி வங்கிக்குச் சென்று 'மூர் பிரைவேட் லிமிட்டெட்' நிறுவனத்தின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கச் சொன்னார்.
"மூர் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் இந்தியாவில் வெற்றிகரமாகச் செயல்படும் நிறுவனம் என்பதைக் காட்டும் வகையில் போலியான ஆவணங்களை வங்கியில் சமர்ப்பிக்கும்படி விஷாலுக்கு கிரெசில்ஸ் ஆணையிட்டார்," என்று போலிஸ் குறிப்பிட்டது.
இத்தகைய குற்றங்களை சிங்கப்பூர் பொறுத்துக்கொள்ளாது என்று அந்த அறிக்கை கூறியது.

