சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், எஸ்ஐஏயின் மலிவுக்கட்டண விமான நிறுவனமான 'ஸ்கூட்' ஆகியவற்றின் விமானங்கள் ஈரானின் ஆகாய வெளிப் பாதையிலிருந்து நேற்று மாற்றிவிடப்பட்டன.
அமெரிக்காவின் மத்திய வான்வெளி நிர்வாகம் அதன் விமானங்கள் ஈராக், ஈரான், ஓமான் வளைகுடா மற்றும் ஈரானுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான கடற்பகுதி ஆகியவற்றின் வான்வெளியைத் தவிர்க்கும் என்று கூறியதையடுத்து சிங்கப்பூர் விமான நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஈராக்கில் இருக்கும் அமெரிக்காவின் தலைமையிலான படைகள் மீது நேற்று அதிகாலை வேளையில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குறிப்பிட்டதையடுத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஈரான் புரட்சிப் படைத் தளபதி காசிம் சுலைமானியின் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்திக் கொன்றதற்கு பதிலடியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குறிப்பிட்டது. திரு காசிம் சுலைமானி கொல்லப்பட்டதையடுத்து மத்திய கிழக்கில் போர் மூளும் அபாயம் இருப்பதாகவும் கூறப்பட்டது.
"அமெரிக்கா, ஈரானுக்கு இடையிலான அண்மைய பிரச்சினைகள் காரணமாக ஐரோப்பாவுக்குச் செல்லும், வரும் எஸ்ஐஏ விமானங்கள் ஈரானின் வான்வெளியிலிருந்து வேறு பாதைக்கு மாற்றிவிடப்படுகின்றன.
"நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறோம். தேவைக்கேற்ப தடங்கள் மாற்றப்படும்," என்று எஸ்ஐஏயின் அறிக்கை குறிப்பிட்டது.

