கணினி மற்றும் கணினி சார்ந்த உதிரிப்பாகங்கள் விற்பனைக் கடைகளைக் கொண்ட அனைவராலும் நன்கு அறியப்பட்ட சிம் லிம் ஸ்குவேர் கடைத்தொகுதி இரண்டாவது முறை மேற்கொண்ட ஒட்டுமொத்த விற்பனை முயற்சி தோல்வி கண்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி வெளியிடப்பட்ட ஏலக்குத்தகையில் ஒட்டு மொத்த விற்பனையில் கடைத்தொகுதியை வாங்க யாரும் முன்வராததால் ஏலக்குத்தகை முடிவுக்கு வந்தது. ரோச்சோர் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே உள்ள சிம் லிம் ஸ்குவேர் 1985ஆம் ஆண்டு கட்டப்பட்ட கடைத்தொகுதி.
இதனை இந்தக் கடைத்தொகுதியின் விற்பனை முகவரும் எஸ்எல்பி ஸ்காட் சொத்து ஆலோசனை நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரியுமான திரு பிரான்சிஸ் டான் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூலையில் நடத்தப்பட்ட முதல் ஏலக்குத்தகையிலும் வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. இருப்பினும் முதல் ஏலக்குத்தகையில் கடைத்தொகுதிக்கு நிர்ணயிக்கப்பட்ட $1.25 பில்லியன் தொகையே இரண்டாவது ஏலக்குத்தகையின்போதும் அறிவிக்கப்பட்டது.
இரண்டாவது ஏலக் குத்தகையிலும் ஏலம் போகாததால் அந்தக் கடைத் தொகுதியில் உள்ள கடைக்காரர்கள் மூன்றாவது ஒட்டு மொத்த விற்பனைக்காக காத்திருக்க விரும்பாதவர்களாய் அங்குள்ள 11 கடைகள் தனிப்பட்ட முறையில் விற்பனை செய்யும் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
விருப்பமுள்ளவர்கள் 11 கடைகளையும் $22 மில்லியனுக்கு ஒட்டுமொத்த விற்பனையாகவும் அல்லது தனித்தனியாகவும் வாங்கலாம் எனத் தெரிய வருகிறது. இந்த விற்பனை நடவடிக்கை பிப்ரவரி ஒன்றாம் தேதி 3 மணிக்கு முடிவடைகிறது. கடைசியாக சிம் லிம் கடைத்தொகுதியின் ஐந்தாவது மாடியில் உள்ள மூன்று கடைத் தொகுதிகள் விற்பனையாகியுள்ளன. அவை சதுர அடி $5,000 மேல் விலைபோனதாக நைட் ஃபிராங் சிங்கப்பூர் சொத்து முகவர் நிறுவனம் தெரிவித்தது.

