மலேசியாவைச் சேர்ந்த கிராப் ஓட்டுநரின் நேர்மையை மெச்சி இணையத்தில் பாராட்டு மழை பொழிகிறது.
39 வயது திரு சதீஷ் கருப்புசாமி கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தமது குடும்பத்தினருடன் மலாக்காவில் உல்லாசப் பயணம் மேற்கொண்டார். அப்போது அதற்கு முதல்நாள் இரவு தமது கிராப் காரில் பயணம் செய்த ஒருவர் தமது பணப்பையை அங்கேயே வைத்துவிட்டுச் சென்றதாக அவருக்குத் தகவல் கிடைத்தது.
காருக்குச் சென்று தேடிப்பார்த்த திரு சதீஷ், பணப்பை அங்கு இருப்பதைக் கண்டார். பணப்பைக்குச் சொந்தக்காரரான சிங்கப்பூரர் திரு கார்னி மாக்கிடம் அதைத் திருப்பிக் கொடுக்க தமது விடுமுறைப் பயணத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு ஜோகூர் பாரு திரும்பினார் திரு சதீஷ்.
அங்கு அவருக்காகக் காத்துக்கொண்டிருந்த திரு மாக்கிடக் அவர் பணப்பையைத் திருப்பிக் கொடுத்தார். அந்த விலை உயர்ந்த பணப்பையில் $250 ரொக்கமும் வங்கி அட்டைகளும் இருந்தன.
திரு சதீஷின் நேர்மையை அனைவரிடமும் காட்ட அவருடன் படம் எடுத்துக்கொண்ட திரு மாக் அதை இணையத்தில் பதிவேற்றம் செய்து நடந்ததை விவரித்தார்.
தாம் ஒன்றும் பெரிதாகச் செய்துவிடவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறிய திரு சதீஷ் அனைவரும் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.

