கழிவறையில் இருந்த பெண்களைப் படமெடுத்ததாகக் குற்றச்சாட்டு

கழிவறையில் இருந்த பெண்களைப் படமெடுத்ததாகக் குற்றச்சாட்டு

2 mins read
cf9f0ff9-2ca9-4844-9141-44c96b5a6b06
-

கழிவறையில் இருந்த பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் படமெடுத்ததாக பிரிட்டனில் உள்ள சிறந்த பல்கலைக்கழகம் ஒன்றில் பயிலும் மாணவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்த மாணவரின் இந்தச் செயலால் 11 பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தமது கல்வியைத் தொடர பிரிட்டனுக்குச் செல்ல அனுமதி கேட்டு அந்த மாணவர் விண்ணப்பம் செய்துள்ளார்.

சிங்கப்பூரைவிட்டுச் செல்ல அவருக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தைக் காக்க, குற்றச்சாட்டை எதிர்நோக்கும் மாணவரின் பெயரையும் அவர் பயிலும் பல்கலைக்கழகத்தையும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண்களின் மானத்துக்குப் பங்கம் விளைவித்தது தொடர்பாக அந்த மாணவர் மீது 19 குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. ஆபாசப்படம் வைத்திருந்ததாகவும் அவர் மீது ஒரு குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

தம்மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் எதிர்த்து அவர் வழக்கு விசாரணை கோரியுள்ளார்.

பிரிட்டன் செல்ல குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த மாணவருக்கு அனுமதி வழங்கப்பட்டால் அவர் மீண்டும் சிங்கப்பூர் திரும்பாமல் தப்பிவிடுவார் என்று அரசு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

அந்த மாணவர் 20 காணொளிகள் எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது. அவற்றில் 16 காணொளிகள் அவரது வீட்டில் உள்ள கழிவறையில் எடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது. அந்தப் பெண்களைத் தமது வீட்டிற்கு வரவழைத்து அந்தக் குற்றத்தை அந்த மாணவர் புரிந்ததால் அதை அவர் திட்டமிட்டு செய்ததாக அரசு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

குற்றச்சாட்டை எதிர்நோக்கும் மாணவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார். பிரிட்டனுக்குச் சென்று தமது கல்வியைத் தொடர்வது குறித்து அந்த மாணவர் செய்த விண்ணப்பம் குறித்து இன்று முடிவெடுக்கப்படும்.