இரண்டு வெவ்வேறு கடன்முதலை துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பாக நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் இரண்டு பதின்மவயதினரும் அடங்குவர். அவர்களில் ஒருவருக்கு 14 வயது.
முதல் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமையன்று கம்பஸ்வேல் வாக்கில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் கட்டடத்தில் நிகழ்ந்தது. அந்தக் கட்டடத்தில் உள்ள கதவு, கேட் ஆகியவை மீது நீல நிறச் சாயம் பீய்ச்சியடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று பதின்மவயதினர் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரண்டாவது சம்பவம் அங் மோ கியோ அவென்யூ 10ல் நிகழ்ந்தது. அங்குள்ள கடை ஒன்றின் கண்ணாடிக் கதவு அடித்து நொறுக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆடவர்கள் இருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். கடன் வழங்குவோர் சட்டத்தின்கீழ் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவாகும். முதல்முறையாகக் கடன்முதலை துன்புறுத்தல் குற்றத்தைப் புரிபவர்களுக்கு $5,000லிருந்து $50,000 வரை அபராதம், ஐந்தாண்டுகள் வரை சிறைத் தண்டனை, அதிகபட்சமாக ஆறு பிரம்படிகள் ஆகியவை விதிக்கப்படலாம்.
கடன்முதலை துன்புறுத்தல்கள் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது என்று போலிசார் தெரிவித்துள்ளனர்.

