பணத்தைக் கையாடிய தலைமையாசிரியருக்குச் சிறை

பணத்தைக் கையாடிய தலைமையாசிரியருக்குச் சிறை

1 mins read

குழந்தைப் பராமரிப்பு நிலையத்துக்குச் சொந்தமான $16,000க்கு மேற்பட்ட பள்ளிக் கட்டணத்தைக் கையாடிய குற்றத்துக்காக நிலையத்தின் தலைமையாசிரியருக்கு 12 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

நம்பிக்கை துரோகக் குற்றம் புரிந்ததை ஸ்டார் லர்னர்ஸ் @ பீஷான் சென்ட்ரல் குழந்தைப் பராமரிப்பு நிலையத்தின் தலைமையாசிரியரான 49 வயது ஹமீடா முகம்மது கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஒப்புக்கொண்டார்.

பள்ளிக் கட்டணத்தை வசூலிக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதியன்று அவர் பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்தார். அவருக்குப் பதிலாகப் பொறுப்பேற்கும் புதிய தலைமையாசிரியரை நேரில் சந்தித்து அவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் அவரைப் பணித்தது. ஆனால் ஹமீடா அவ்வாறு செய்யவில்லை. இதையடுத்து, பள்ளியின் வரவுசெலவுக் கணக்கில் குளறுபடி இருந்ததை நிர்வாகக் குழு கண்டுபிடித்தது. இதுகுறித்து போலிசில் புகார் செய்யப்பட்டது. நிலையத்துக்குச் சொந்தமான பணத்தை ஹமீடா கையாடியதாக விசாரணையில் தெரிய வந்தது. ஹமீடா இம்மாதம் 14ஆம் தேதி தமது சிறைவாசத்தைத் தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டது.