கர்ப்பிணிப் பெண்களுக்கு உடற்பயிற்சி வழிகாட்டிகள்

கர்ப்பிணிப் பெண்களுக்கு உடற்பயிற்சி வழிகாட்டிகள்

2 mins read
5db8d213-7c36-48fb-b87a-c260cc5efe47
வரைபடம்: எஸ்டி -

கர்ப்பகால நீரிழிவுச் சம்பவங்களின் எண்ணிக்கை சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், கர்ப்பிணிப் பெண்களுக்கான உடலியல் நடவடிக்கை மற்றும் உடற்பயிற்சிக்கான முதலாவது வழிகாட்டிகள் வெளியிடப்பட்டுள்ளன.

மகப்பேறு அடையும் வயதில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்கெனவே நீரிழிவுக் கோளாறு இருந்து வருவதாலும் மகப்பேறு காலத்தில் உடல்பருமனாக இருப்பதும் உலக அளவில் அதிகரித்து வருவதால், சிங்கப்பூரிலும் கர்ப்பகால நீரிழிவு உயர்ந்துள்ளது என்றார் சுகாதார மூத்த துணை அமைச்சர் ஏமி கோர்.

கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற நீரிழிவு மாநாட்டில் அமைச்சர் உரையாற்றினார்.

"சிங்கப்பூர் கர்ப்பிணிப் பெண்களில் 20 விழுக்காட்டினருக்கு கர்ப்பகால நீரிழிவு உள்ளது. உலக அளவிலான கர்ப்பகால நீரிழிவு விகிதமான 7லிருந்து 10% என்று பார்த்தால் இது அதிகம்தான்.

"அவர்களில் 20லிருந்து 50 விழுக்காட்டினருக்கு அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் இரண்டாம் வகை நீரிழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது," என்றார் கேக மகளிர், சிறார் மருத்துவமனையின் தாய்வழி கரு மருந்துப் பிரிவின் இணை மருத்துவ ஆலோசகர் டாக்டர் செரின் தென்.

அளவுக்கு அதிகமான உடல் பருமனால் கர்ப்பகால நீரிழிவு ஏற்பட சாத்தியம் அதிகம் உள்ளது என்று கேகே மகளிர், சிறார் மருத்துவமனை தலைமையேற்று நடத்தி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அதில் சிங்கப்பூரில் கர்ப்பம் தரித்த பெண்களிடையே உடற்பருமன் ஏற்படுவது உயர்ந்துள்ளது என்றும் ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 24 விழுக்காட்டினர் அளவுக்கு அதிகமான உடற்பருமனோடும் 11 விழுக்காட்டினர் உடற்பருமனோடும் உள்ளனர் என்று காட்டியது.

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வதால், கர்ப்பகால நீரிழிவு ஏற்படுவது குறைந்துள்ளது என்று ஆதாரம் இருந்தாலும், கர்ப்பிணிப் பெண்கள் உடலியல், மனோவியல் இடையூறுகளால் துடிப்பற்ற வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கின்றனர் என்று அமைச்சர் ஏமி கோர் கூறினார்.

தம்மை உதாரணமாக எடுத்துக்காட்டிய அமைச்சர், தாம் கர்ப்பமாக இருந்தபோது, தம்மிடம் "அதிகம் உண்ண வேண்டும், அதிகம் ஓய்வெடுக்க வேண்டும், கடுமையாக வேலை செய்யாதே," என்று கூறப்பட்டது. ஆக, கர்ப்பிணிப் பெண்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் டாக்டர் கோர் சொன்னார்.

ஆரம்ப காலத்திலேயே கண்டுபிடிக்காவிட்டாலோ அல்லது முறையாக பராமரிக்கப்படவில்லை என்றாலோ அது கர்ப்பகால நீரிழிவுக்கு இட்டுச் சென்று, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை வெளியே எடுத்தல், குழந்தையின் எடை வழக்கத்துக்கு மாறாக பெருத்து காணப்படுதல், இறந்தே குழந்தை பிறத்தல், பிற்காலத்தில் தாயாருக்கு மட்டுமல்லாமல் அந்தக் குழந்தைக்கும் நீரிழிவு தோன்றும் அபாயம் ஆகிய விளைவுகள் ஏற்படும் என்றும் அமைச்சர் கோர் எச்சரித்தார்.

கர்ப்பிணிப் பெண்களை வாரத்துக்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்கும் வழிகாட்டிகளும் பரிந்துரைகளும் சிங்கப்பூரில் உள்ள அனைத்து மகப்பேறு மருத்துவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் நேற்று தெரிவிக்கப்பட்டது.