ஹவ்காங்கில் இல்லத் தாதிமை அறநிறுவனத்தின் முதியோர் பகல் பராமரிப்பு மற்றும் 'டிமென்ஷியா' நிலையம்

ஹவ்காங்கில் இல்லத் தாதிமை அறநிறுவனத்தின் முதியோர் பகல் பராமரிப்பு மற்றும் 'டிமென்ஷியா' நிலையம்

2 mins read
d17236d6-6de2-4043-b46e-19ce591c601c
சுகாதார அமைச்சின் நிரந்தரச் செயலாளர் சான் யெங் கிட் (வலது) இல்லத் தாதிமை அறநிறுவனத்தால் ஹவ்காங்கில் அமைக்கப்பட்டு உள்ள நல்வாழ்வு நிலையத்தில் உள்ள உடற்பயிற்சி சாதனத்தில் உடற்பயிற்சி செய்து பார்க்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்: -

வீட்டில் ஒன்றும் செய்யாமல் இருப்பது என்பது ஓய்வுபெற்ற எலன் தியா தியான் சியோங்குக்கு முடியாத காரியம்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து, மனைவி, மகளுடன் வாழும் அந்த 82 வயது முதியவர், ஹவ்காங் சமூக மன்றத்துக்குச் சென்று அங்கு தம்மைப் போன்ற முதியவர்களைச் சந்திப்பார்.

இல்லத் தாதிமை அறநிறுவனம் நேற்று அந்த சமூக மன்றத்தில் திறந்த முதலாவது மூத்தோர் பராமரிப்பு நிலையத்தின் திறப்பு விழாவுக்கு வந்திருந்த 25 முதியவர்களில் திரு தியாவும் ஒருவர்.

வெல்னஸ்@ஹவ்காங் என்று அழைக்கப்படும் அந்த நிலையம், மூத்தோருக்கான பகல்நேரப் பராமரிப்பு, டிமென்ஷியா எனும் முதுமை ஞாபக மறதி நோய் தொடர்பான பராமரிப்பு வசதிகளைக் கொண்டுள்ளது.

அவர்களின் பராமரிப்பாளர் வேலைக்குச் சென்று திரும்பும் வரை அவர்கள் அந்நிலையத்தில் இருப்பார்கள்.

அந்நிலையத்தில் செயற்கை புல் உடைய பூங்கா, ஓய்வெடுக்கும் அறை, மூத்தோர் உடற்பயிற்சி செய்வதற்கான இடம் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

முதியவர்களைப் பராமரிக்கும் ஆற்றல்களைக் குடும்ப உறுப்பினர்களும் பராமரிப்பாளர்களும் கற்றுக்கொள்ள அவர்களுக்கென சிறப்பு ஆதரவு மற்றும் பயிற்சிகளும் அங்கு நடத்தப்படுகின்றன.

நேற்று அந்நிலையத்தைத் திறந்து வைத்த சுகாதார அமைச்சின் நிரந்தரச் செயலாளர் திரு சான் யெங் கிட், சிங்கப்பூரின் மூப்படைந்து வரும் மக்கள் தொகைக்கு சமூக முதியோர் பராமரிப்பு சேவைகள் மிகவும் அவசியம் என்றார்.

அந்நிலையத்தைச் சுற்றிப் பார்த்த திரு சான், அங்கு தாதிமை, ஆதரவு பராமரிப்புத் துறையில் உள்ள மனிதவள அக்கறைகள், இல்லத் தாதிமை அறநிறுவனம் போன்ற அமைப்புகளுக்கு உள்ள நடைமுறைச் செலவுகள் ஆகியவை சவால்களாக விளங்குகின்றன என்று அறிந்துகொண்டார்.

"எதிர்காலத்தில் இதுபோன்ற முதியோர் பராமரிப்புக் கழகங்களுக்கு கூடுதல் ஆதரவளிக்க சுகாதார அமைச்சு ஆவன செய்யும்," என்றும் திரு சான் தெரிவித்தார்.