மலேசியா: ஏப்ரலுக்குள் ஒப்பந்தம் நிறைவுபெறும்

மலேசியா: ஏப்ரலுக்குள் ஒப்பந்தம் நிறைவுபெறும்

2 mins read
697b1206-bca5-4f7f-b4d2-6a4df6d81616
அண்மையில் சிங்கப்பூரில் சந்தித்துக்கொண்ட போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானும் மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக்கும் (இடது) சீனப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர். படம்: கோ பூன் வான் ஃபேஸ்புக் -

சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையிலான ரயில் இணைப்புத் திட்டம் தொடர்பான ஒப்பந்தம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் நிறைவுபெற்றுவிடுவதில் இரு நாடுகளும் கடப்பாடு கொண்டுள்ளதாக மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தமது ஃபேஸ்புக் பதிவில், தாம் சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானைச் சந்தித்ததாகவும் அதில் சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையிலான இந்த ரயில் இணைப்புத் திட்டத்தின் முன்னேற்றம் பற்றி விவாதித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

"அது பயன்மிக்க கருத்துப் பரிமாற்றமாக விளங்கியது. இதற்கான ஒப்பந்தத்தை ஏப்ரல் மாதத்துக்குள் நிறைவேற்றும் முடிவில் இருவரும் இருக்கிறோம்," என்று அவர் விளக்கினார்.

மலேசியாவில் கடந்த 2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குப் பிறகு பதவியேற்ற புதிய அரசாங்கம் அதற்கு முந்தைய அரசாங்கம் செய்துகொண்ட ஒப்பந்தங்களை ஆய்வு செய்யப்போவதாக முடிவு செய்தது.

இதனால் இந்த ரயில் இணைப்புத் திட்டம் தொடர்பாக நிச்சயமற்ற நிலை இருந்து வந்தது நினைவுகூரத்தக்கது.

இந்த ரயில் இணைப்புத் திட்டம் ஜோகூர் பாருவின் புக்கிட் சகார் பகுதியையும் உட்லண்ட்ஸ் பகுதியையும் இணைக்கும்.

சிங்கப்பூர்-மலேசியாவுக்குமிடையே மணிக்கு 10,000 பயணிகள் பயன்படுத்தக்கூடிய இந்தச் சேவைஜோகூர் கடற்பாலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கம் கொண்டது.

இந்தத் திட்டம் 2024ஆம் ஆண்டு நிறைவுறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், இந்த ரயில் இணைப்புத் திட்டம் தொடர்பிலான அனைத்து ஒப்பந்தங்களையும் மறுஆய்வுக்கு உட்படுத்திய பின்னர் கையெழுத்திடலாம் என்ற எண்ணத்தில், மூன்றாவது முறையாக இந்த திட்டத்தை மலேசியா நிறுத்திவைத்தது.

இந்த நிறுத்திவைப்பு இவ்வாண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவடையும் என்று கூறிய திரு லோக், இந்த நிறுத்திவைப்பை 'திட்ட நிறைவேற்றப் பணி' என வர்ணித்திருந்தார்.

மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது ரயில் இணைப்புத் திட்டத்தை 36 விழுக்காடு செலவினக் குறைப்புடன் நிறைவேற்ற ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவித்த பின் இந்த நிறுத்திவைப்பு அறிவிக்கப்பட்டது.

இது பற்றி தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்ட போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான், தாம் திரு லோக்கை அண்மையில் சந்தித்ததாகவும் அவருக்கு சீனப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததுடன் இருதரப்பு போக்குவரத்து ஒத்துழைப்பு தொடர்பில் மேலும் முன்னேற்றம் காண்பதுடன், இரு நாடுகளும் மக்களுக்காக இன்னும் அதிகம் செய்ய வாழ்த்துத் தெரிவித்ததாகவும் கூறினார்.