சிங்கப்பூரில் உள்ள ஏழு வட்டாரங்களில் உள்ள குடியிருப்பாளர்களும் நிறுவனங்களின் முதலாளிகளும் அடுத்த ஆண்டு முதல் தங்கள் தண்ணீர் பயன்பாட்டை உன்னிப்பாகக் கவனித்து, தண்ணீரை அதிகம் சேமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புக்கிட் பாத்தோக், ஹவ்காங், ஜூரோங் வெஸ்ட், துவாஸ், தெம்பனிஸ் நார்த், தெங்கா ஆகிய அந்த ஏழு வட்டாரங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விவேக தண்ணீர் மீட்டர்கள் பொருத்தும் முதற்கட்ட பணிகள் தொடங்கும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்று அறிவித்தது.
இந்த வட்டாரங்களில் உள்ள வீடுகளிலும் வர்த்தக, தொழிலியல் கட்டடங்களிலும் வரும் 2023ஆம் ஆண்டுக்குள் 300,000 மீட்டர்கள் பொருத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவேக மீட்டர்கள், தனிநபரின் சுகாதாரத் தரவை அளிக்கும் உடலுறுதிக் கண்காணிப்புக் கருவிகள் போன்று செயல்படும்.
அதுபோல, ஓர் இணையவாசல் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகள், வர்த்தக, தொழிலியல் கட்டடங்களின் தண்ணீர் பயன்பாட்டை இந்த மீட்டர் வழி தெரிந்துகொள்ளலாம் என்றும் இந்தத் தகவல்கள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கழகம் விவரித்தது.
மேலும் உயர்வான தண்ணீர் பயன்பாடு குறித்தும் தண்ணீர் கசிவு குறித்தும்கூட இந்த மீட்டர் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கும்.
தண்ணீர் சேமிப்பு முயற்சிகளுக்கு இந்த விவேக மீட்டர்கள் பெருந்துணை புரியும் என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறினார்.
நீ ஆன் சிட்டியில் நேற்று நடைபெற்ற தண்ணீர் பாதுகாப்பு பற்றிய பொதுப் பயனீட்டுக் கழகத்தின் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "சிங்கப்பூரில் ஒவ்வொருவரும் சராசரியாக நாள் ஒன்றுக்கு 141 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள். இன்னும் அதிகமான தண்ணீரைச் சேமிக்க மக்கள் பங்காற்றலாம்," என்றார்.
விவேக மீட்டர்களைப் பொருத்துவதற்கும் பராமரிக்கவும் கட்டணம் வசூலிக்கப்படாது. முதற்கட்ட பணிகள் முடிவுற்றதும் தீவு முழுவதும் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.

