காலஞ்சென்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு யோங் பாங் ஹாவ்வின் செயலாளராக 35 ஆண்டுகளாகப் பணியாற்றியவர் 71 வயது திருவாட்டி ஃபிலிஸ் சீ.
"நீதிமன்றத்தில் மிகக் கண்டிப்பானவராகத் தோன்றும் திரு யோங், தமக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் மிகவும் அன்பாக நடந்துகொள்வார் என்று நேற்று முன்தினம் தமது முன்னாள் முதலாளியின் கண்விழிப்புச் சடங்குக்கு வந்திருந்தபோது, செய்தியாளர்களிடம் தமது எண்ணங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.
திரு யோங் கடந்த வியாழக்கிழமை தமது 93வது வயதில் காலமானார்.
அதிபர் ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியன் லூங், தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங், முன்னாள் மூத்த அமைச்சர் பேராசிரியர் எஸ். ஜயகுமார் ஆகியோர் நேற்று முன்தினம் திரு யோங்கின் கழ்விழிப்புச் சடங்கில் கலந்துகொண்ட பல நூறு பேரில் அடங்குவார்கள்.
"தமது சக நீதிபதிகளிடமும் ஊழியர்களிடமும் மிகுந்த அன்புடன் பழகினார் திரு யோங். அவருடன் வேலை செய்தவர்களை அவர் நன்கு கவனித்துக்கொள்வதுடன் அவர்களின் வாழ்க்கைத் தொழிலை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்தார்," என்றார் தலைமை நீதிபதி சுந்தரேஷ்.
திரு யோங் 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பதவி ஒய்வு பெற்றார். திரு சுந்தரேஷ் அதற்கு பத்து நாட்களுக்கு முன் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார்.
தாம் பிரதமராகப் பொறுப்பேற்றதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் திரு யோங், தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்றுக்கொண்டார் என்று கூறிய திரு கோ சோக் டோங், பிரதமர் என்ற முறையில் தலைமை நீதிபதி யோங்குடன் சிறந்த நட்புறவு கொண்டிருந்ததாகவும் சட்டத்துறையை அவர் மிகச் சிறந்த முறையில் மேம்படுத்தினார் என்றும் புகழாரம் சூட்டினார்.
"பெருமதிப்புக்குரிய சிங்கப்பூரர் ஒருவரை நாம் இழந்துவிட்டோம்," என்றும் திரு கோ நெகிழ்வுடன் கூறினார்.
"பிரிட்டனுக்கு ஒவ்வொரு முறையும் திரு யோங் செல்லும்போது, பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று அங்கு பயிலும் சிங்கப்பூரின் தலைசிறந்த சட்டத்துறை மாணவர்களைச் சந்தித்து, சட்டத்துறையிலும் நீதித் துறையிலும் வாழ்க்கைத் தொழிலை அமைத்துக்கொள்ள அவர் ஊக்கப்படுத்துவார்," என்று தெரிவித்தார் முன்னாள் மூத்த அமைச்சரும் அதிக காலம் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவருமான பேராசிரியர் எஸ். ஜயகுமார்.

