கேன்டோன்மண்ட் ரோட்டில் நிகழ்ந்த விபத்து தொடர்பில் இரண்டாவது ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை நிகழ்ந்த விபத்தில் மின் மிதிவண்டியில் சென்ற 69 வயது திருமதி ஓங் சோ போய் சம்பவ இடத்திலேயே மாண்டார்.
அவர் மீது இரண்டு வாகனங்கள் மோதியதாக நம்பப்படுகிறது. மஞ்சள் நிற காரை ஓட்டிய 44 வயது ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுவிட்டார்.
போலிசார் விசாரணையில் ஒத்துழைக்காத அந்தப் பெண் ஓட்டுநர் விபத்து நிகழ்ந்து நான்கு நாட்களுக்குப் பிறகு வெள்ளிக் கிழமை அன்று கைது செய்யப்பட்டார்.
ஏற்கெனவே இந்த விபத்து தொடர்பில் மசராட்டி காரின் 25 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது கார் சாலையில் தவறான திசையில் சென்று கொண்டிருந்தது. இதனால் ஆபத்தான முறையில் காரை ஓட்டியதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட காணொளிகள், மஞ்சள் காரும் விபத்தில் சிக்கியதை காட்டின.
முதல் வாகனம் மோதியதால் சாலையில் விழுந்து கிடந்த திருமதி ஓங் மீது மோதிய மஞ்சள் கார் அவரை பல மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது.
ஆனால் போலிசார் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு வருவதற்கு முன்பாகவே மஞ்சள் கார் அங்கிருந்து சென்றுவிட்டது.
ஒற்றைப் பெற்றோரான திருமதி ஓங்குக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பினாக்கிள்@டக்ஸ்டன் அருகே மின் மிதிவண்டியை அவர் ஓட்டிச் சென்றபோது விபத்தில் சிக்கினார்.
அவரது குடும்பத்தினர் இரண்டு ஓட்டுநர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

