பொங்கோலில் ஒரு வீட்டில் வேலை பார்த்த 30 வயது இந்தோனீசியப் பணிப்பெண் டயானா வீட்டினரின் சோற்றிலும் குடிநீரிலும் சிறுநீர், எச்சில், மாதவிடாய் ரத்தம் போன்றவற்றைக் கலந்துள்ளதாக நேற்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
அவரின் உடல் நீர் கலக்கப்பட்ட தண்ணீரைக் குடிக்கும் குடும்பத்தினர் அவர் என்ன செய்தாலும் ஏற்றுக்கொள்வதுடன், அவரது செயல்களுக்காக அவரைத் திட்டமாட்டார்கள் என நம்பினார். குறும்புச் செயல் தொடர்பான இரு குற்றங்களை ஒப்புக்கொண்ட அவருக்கு நேற்று ஏழு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. திருட்டுக் குற்றத்தையும் அம்மாது ஒப்புக்கொண்டார்.
2017 பணிக்கு அமர்த்தப்பட்ட அவர் வேலை பார்த்த வீட்டில் ஆறு பேர்கள் வசிக்கின்றனர்.
முதலாளியின் தாயாரிடமிருந்து 2017 ஆகஸ்ட் முதல் 2018 ஜூன் வரையில் ஐந்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் $13,000க்கும் அதிகமான தொகையை அவர் திருடியுள்ளார். திருடப்பட்ட தொகை திரும்பக் கிடைக்கவில்லை.
பணிப்பெண்ணின் குற்றச் செயல்கள் எவ்வாறு வெளிச்சத்துக்கு வந்தன என்பது குறித்து நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவித்தது. வீட்டு முதலாளியின் மனைவி சென்ற ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி போலிசில் புகார் செய்துள்ளார்.
ஒவ்வொரு குறும்புச்செயல் குற்றத்திற்கும் அவருக்கு இரண்டாண்டுகள் வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம். திருட்டுக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழாண்டுகள் வரை சிறையும் அபராதமும் விதிக்கப்பட்டலாம்.

