தனது ஆறு மாத மகனின் கழுத்தை மெத்தையில் வைத்து அழுத்தி துன்பம் விளைவித்த துப்புரவுப் பணியாளருக்கு நேற்று $4,500 அபராதம் விதிக்கப்பட்டது. அந்த 25 வயது சிங்கப்பூர் ஆடவர், குழந்தையின் சத்தம் எரிச்சலை ஏற்படுத்தியதால் அவ்வாறு செய்துள்ளார். அபராதத்தை செலுத்த முடியாவிட்டால் அவர் நான்கு வாரம் சிறையில் இருக்க வேண்டும். குழந்தையின் அடையாளத்தைப் பேணும் பொருட்டு ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
மனைவியைத் துன்புறுத்தியது, முன்யோசனை இல்லாத செயல்மூலம் குழந்தைக்கு வலி ஏற்படுத்தியது ஆகிய குற்றங்களை அவர் சென்ற நவம்பர் மாதம் ஒப்புக்கொண்டார்.
ஆடவரின் சகோதரர், மனைவியின் சகோதரி ஆகி யோருடன் அக்குடும்பம் பொங்கோலில் வசித்தது.கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி, "சத்தம்" போடுவதால் குழந்தை மீது ஆடவர் எரிச்சல் அடைந்தார். அன்று மாலை 3 மணி அளவில் குழந்தையை கட்டிலில் போடுமாறு மனைவியிடம் கூறினார். முதலில் மறுத்த மனைவி, அவர் வற்புறுத்தியதும் குழந்தையை கட்டிலில் படுக்க வைத்தார்.
சிறிது நேரத்தில் குழந்தை அழுவதைக் கேட்ட மனைவி ஓடிவந்து பார்த்தபோது, குழந்தை மெத்தையில் குப்புறக் கிடந்தது. ஆடவர் குழந்தையின் கழுத்தை அழுத்திக் கொண்டிருந்தார். கணவரின் முகத்தில் அறைந்த மாது, குழந்தையை ஆடவரிடம் இருந்து பறித்தார். அப்போது அந்த ஆடவர் மனைவியின் நெற்றியில் குத்தினார்.
குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியில் ஓடிய மாது, குழந்தையை அண்டைவீட்டாரிடம் கொடுத்துவிட்டு போலிசில் புகார் செய்தார். செங்காங் மருத்துவமனையில் மனைவிக்கு தலையில் சிறிய காயம் ஏற்பட்டது அறியப்பட்ட துடன் ஏழு நாள் மருத்துவ விடுப்பு வழங்க பட்டது. கேகே மகளிர் சிறார் மருத்துவமனையில் குழந்தை பரிசோதிக்கப்பட்டு, நல்ல நிலையில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

