லிட்டில் இந்தியா கடைகளில் கடைசிநேர பொங்கல் பரபரப்பு

கடைசி நேரத்தில் பொங்கல் பண்டிகைக்காகப் பொருள் வாங்க பலரும் லிட்டில் இந்தியாவின் கேம்பல் லேனில் நேற்று கூடினர். கொளுத்தும் வெயிலைப் பொருட்படுத்தாமல் மக்கள் கிடுகிடுவென வந்து வாழையிலை, கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிவிட்டுக் கிளம்பினர்.

வார நாளாக இருந்தபோதும் மக்கள் இங்கே  கூடி பரபரப்புடன் பொருட்களை வாங்கினர். இதனால் லிட்டில் இந்தியா வட்டாரம் கொண்டாட்டக் கலையுடன் காட்சி அளித்தது. 

கிறிஸ்துவர்கள் பலரும் பொங்கல் கொண்டாடினாலும் கிறிஸ்துவரான குமரனின் குடும்பத்தில் இதுவரை பொங்கல் கொண்டாடியதில்லை. தமது வருங்கால மனைவியுடன் முதல் முறையாக பொங்கலுக்காக பொருள் வாங்க அவர் நேற்று கேம்பல் லேனுக்கு வந்திருந்தார்.

“இது எனக்கு புதிய அனுபவமாக உள்ளது. கடைகளில் சமையலுக்கும் வீட்டை அலங்கரிப்பதற்கும் தேவையான  பொருட்களை வாங்க வேண்டி இருந்தது. ஆனாலும் உறவினர்கள் அனைவரும் ஒருசேர இதனைக் கொண்டாடுவதால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்றார் அந்த 28 வயது வாகன ஓட்டுநர்.

கூட்டம் அதிகமாக இருந்தாலும் அதுவே கொண்டாட்ட உணர்வை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார் தகவல் தொழில்நுட்ப நிபுணர் புருஷோத்தமன், 28 வயது.  

பெரும்பாலான பொருட்களை நேற்று முன்தினமே வாங்கியதாகக் கூறிய அவரது தாயார் நளினி, 60, பூக்களையும் இனிப்புப் பண்டங்களையும் நேற்று வாங்கியதாகக் கூறினார்.

மக்கள் கூட்டம் சமாளிக்கும்படியான அளவில் இருந்ததாகக் கூறிய செல்வராஜ், 63 வயது, தாமதம் இன்றி பொருட்களை வாங்க முடிந்ததாகக் கூறினார்.

65 வயது தேவியைப் போல் சிலர் பொருட்களை வாங்கிக் கொண்டு வேலைக்குச் செல்ல வேண்டி இருந்தது.  

“பிற்பகல் ஒரு மணிக்கு என் வேலை தொடங்குகிறது. கூட்டம் அதிகமாவதற்குள் நான் பொருட்களை வாங்க வேண்டும்,” என்று கூறினார் சாங்கி மருத்துவமனையில் பணிபுரியும் தேவி. 

கடையில் பொருட்களை வாங்கிவிட்டு வேலைக்குச் சென்ற மற்றொருவர் 76 வயது டான் டோக் செங்  மருத்துவமனை ஊழியரான சுப்ரமணியம். 

“கூட்டமாக இருந்தபோதும் நடமாடச் சிரமப்படவில்லை. எனக்குத் தேவையான பொருட்களை ஒரே கடையில் வாங்கி விரைவில் கேம்பல் லேனைவிட்டு வெளியேற முடிந்தது,” என்றார் திரு சுப்ரமணியம்.

ஆயினும், சூரியக் கடவுளுக்கு நன்றி கூறுவதற்கு குடும்பத்தாருடன் ஒன்றாகக் கொண்டாடி மகிழும் நல்ல தருணமாக பொங்கல் திகழ்வதால் கூட்டத்தோடு கூட்டமாக பொருட்களை வாங்குவதில் மகிழ்ச்சியே என்றார் 54 வயது இல்லத்தரசியான ராணி.