காட்டுத் தீக்கு நிதி திரட்டுவதாகக் கூறி ஏமாற்றும் மோசடிக்காரர்கள்

ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ, மோசடிக்காரர்களுக்குப் புதிய இலக்காகியுள்ளது. காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதாகக் கூறி பொதுமக்களிடமிருந்து பணம் பறிப்பது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய மத்திய போலிஸ், ஆஸ்திரேலிய பயனீட்டாளர் போட்டித்தன்மை ஆணையம் ஆகியவை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக சிங்கப்பூர் போலிஸ் படை அதன் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் நேற்று குறிப்பிட்டது.

இத்தகைய மோசடி சம்பவங்களில் பணம் பறிக்க தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்வது, குறுஞ்செய்திகள் அனுப்புவது, பொய்யான இணையப்பக்கங்களை உருவாக்குவது, சமூக ஊடகங்களில் பொய்யான பதிவுகளை வெளியிடுவது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை மோசடிக்காரர்கள் கையாளுவர்.

ஒரு சில வேளைகளில் அவர்களாகவே அறநிறுவனப் பெயர்களை உருவாக்கிக்கொண்டு, காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களைப்போல வேடமிடுவர்.

சிங்கப்பூரில் இத்தகைய மோசடி சம்பவங்கள் இதுவரை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை என்றாலும், பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என போலிஸ் வலியுறுத்தியது.

இதற்கிடையே, போலிஸ் நேற்று வெளியிட்ட ஆலோசனைக் கடிதம் ஒன்றில், வங்கி வாடிக்கையாளர்களைக் குறிவைத்து ஒரு சில புதிய வகை மோசடிகள் செய்யப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.