பொய் சத்தியப் பிரமாணம் செய்ததாக நிறுவனம் மீது குற்றச்சாட்டு

வேலைக்காக விண்ணப்பம் செய்திருந்த சிங்கப்பூரர்களைப் பரிசீலனை செய்த பிறகு அது சரிவராத பட்சத்தில்தான் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்ததாகக் கூறி பொய் சத்தியப் பிரமாணம் செய்ததாக Ti2 தளவாட நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வர்த்தக மேம்பாட்டு நிர்வாகி பதவியில் வெளிநாட்டு ஊழியரை அமர்த்தியதற்கு முன்பு வேலைக்காக விண்ணப்பம் செய்திருந்த சிங்கப்பூரர்களை நியாயமான முறையில் பரிசீலனை செய்ததாக அந்த நிறுவனம் பொய் கூறியதாகக் கூறப்படுகிறது. சோ ஜியான்சின் என்ற வெளிநாட்டவரை வர்த்தக மேம்பாட்டு நிர்வாகியாகப் பணியில் அமர்த்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதியன்று மனிதவள அமைச்சின் வேலை அனுமதிச் சீட்டு பிரிவிடம் வேலை நியமனச் சீட்டுக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தபோது Ti2 நிறுவனம் பொய் சத்தியப் பிரமாணம் செய்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.

அந்த வேலையை வெளிநாட்டவருக்குக் கொடுப்பதற்கு முன்பு இரண்டு சிங்கப்பூரர்களை பேட்டி கண்டதாக நிறுவனம் பொய் கூறியது என்று தெரிவிக்கப்பட்டது.

வெளிநாட்டு மனிதவளச் சட்டத்தின்கீழ் குற்றம் புரிபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, $20,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.