சக்கர நாற்காலியில் இருந்தவருக்கு உதவிய கட்டுமான ஊழியர்கள்

சக்கர நாற்காலியில் இருந்த முதியவர் ஒருவருக்கு உதவிய ஐந்து கட்டுமான ஊழியர்களுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.

நேற்று முன்தினம் (ஜனவரி 13) அதிகாலை 5 மணியளவில் மரின் பரேடில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் ஏற முடியாமல் தவித்தார் 60களில் இருந்த ஒருவர். சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அவரால் பேருந்து நின்ற இடத்துக்குச் செல்ல முடியாத நிலை நிலவியது.

மரின் பரேட் ரோட்டில் இருக்கும் புளோக் 87க்கு முன்புறம் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்ததால் அருகில் தற்காலிக பேருந்து நிறுத்தம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால், அங்கு பணிகள் நிறைவுறாமல் இருந்ததால் சக்கர நாற்காலியிலிருந்த அந்த ஆடவரால் பேருந்து நிறுத்தத்துக்குச் செல்ல இயலவில்லை. 

அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து வெளிநாட்டு ஊழியர்கள் அவருக்கு உதவினர். அவர் செல்லவேண்டிய பேருந்து தடம் எது என்பதை அறிந்துகொண்டு கையசைத்து பேருந்தை நிறுத்தினார் ஓர் ஊழியர்.

மற்ற நான்கு ஊழியர்கள் அவரை அவரது சக்கர நாற்காலியுடன் தூக்கிச் சென்று பேருந்துக்கு அருகில் விட்டனர்.

இதனைக் கண்டு மிகவும் நெகிழ்ந்துபோன ஸ்டோம்ப் வாசகர், “நம்மில் பலர் உறங்கிக்கொண்டிருக்கும் இரவு வேளையில் கடுமையாக உழைக்கும் இந்த வெளிநாட்டு ஊழியர்கள் பாராட்டுக்குரியவர்கள்,” என்றார்.

மேலும், “வெளிநாட்டு ஊழியர்களைப் பார்க்கும்போது புரிந்துணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்,” என்று குறிப்பிட்ட அவர், நமக்கான வசதிகளுக்காக அவர்கள் இரவிலும் பணிபுரிவதைச் சுட்டிக்காட்டினார்.
 

#வெளிநாட்டு #ஊழியர்கள் #கட்டுமான #தமிழ் முரசு