கடன் வாங்கியவரை ஈமச்சடங்கு உடையுடன் சென்று பயமுறுத்திய கடன் வசூலிப்பாளருக்குச் சிறை

கடனாகப் பெற்ற தொகையை வசூலிக்க உரிமம் பெற்ற Guarantee Debts Collection Service எனும் நிறுவனத்தைச் சேர்ந்த, 59 வயதான பெ சோங் வீ எனும் ஆடவர் ஈமச்சடங்குக்கு அணியும் உடையுடன் சென்று கடன் வாங்கியவரைப் பயமுறுத்தியதற்காக ஐந்து வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போலிசாரால் கைது செய்யப்பட்ட அவர், போலிஸ் காவலிலிருந்து வெளியேற முயற்சி செய்ததுடன் அவரை வேறொரு இடத்துக்கு மாற்ற முற்பட்ட போலிசாரிடமும் போராடினார்.

கடன் வாங்கிய திரு வீ  சுவீ கூன் என்பவரின் முகம் அச்சிடப்பட்ட தாளை வைத்துக்கொண்டு திரு ஊய் பணியாற்றிய நிறுவனத்துக்குச் சென்று பணத்தை வசூலிக்க பெ முயற்சி செய்ததாகவும், கடன் வாங்கியவர் வசிக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் அவரது படத்தைக் கொண்ட பதாகை ஒன்றை பெ வைத்துக்கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டது.

இத்தகைய  மூன்று குற்றச்சாட்டுகளையும் அரசாங்க ஊழியர் மீது பலப்பிரயோகம் செய்ததையும் ஒப்புக்கொண்ட பெக்கு இன்று (ஜனவரி 15) நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டது.

#தமிழ்முரசு