சாமிஸ் கறி உணவக வாடிக்கையாளர்கள் நிம்மதி

சிங்கப்பூரர்கள் மத்தியில் பெயர்பெற்ற சாமிஸ் கறி உணவகம் அதே இடத்தில் தொடர்ந்து செயல்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அதன் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இவ்வாண்டு மார்ச் மாத மத்தியில் அந்த உணவகத்தின் குத்தகைக் காலம் முடிவடையவிருந்த நிலையில், அதை மேலும் ஈராண்டுகளுக்கு சிங்கப்பூர் நில ஆணையம் நீட்டித்துள்ளது.

 

டெம்ப்சி ஹில் பகுதியில் 25, 25ஏ புளோக்குகளில் அமைந்துள்ள சாமிஸ் கறி, ரெட்டாட் புரூஹவுஸ், லாங் பீச் சீஃபூட், மோர்சல்ஸ் ஆகிய நான்கு உணவகங்களுக்கும் ஒன்பது ஆண்டுகள் வரை குத்தகை வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அவை நான்கும் டெம்ப்சி வட்டாரத்தின் அடையாளச் சின்னமாக விளங்குவதாகக் குறிப்பிட்ட நில ஆணையம், ‘முதன்மை மரபுடைமை குத்தகைதாரர்கள்’ என்ற வகையில் அவற்றுக்குப் புதிய குத்தகை வழங்கப்படும் என்றும் கூறியது.

குத்தகை நீட்டிக்கப்பட்டதால் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகச் சொன்னார் சாமிஸ் கறி உணவக இயக்குநர் திருவாட்டி நாகஜோதி மகேந்திரன்.

1960களில் அவருடைய தாத்தாவால் தொடங்கப்பட்ட அந்த உணவகம், தொடர்ந்து அதே கட்டடத்தில் நடத்தப்பட்டு வருகிறது. 

“உணவகத்தை வேறு இடத்திற்கு மாற்றப் போகிறீர்களா எனக் கேட்டு, வாடிக்கையாளர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வராத நாளில்லை. இப்போது, நாங்கள் வேறு எங்கும் செல்லப் போவதில்லை என உறுதியாகக் கூறமுடியும்,” என்றார் திருவாட்டி நாகஜோதி.

#சாமிஸ் #டெம்ப்சி #தமிழ்முரசு