தந்தை என மதித்து வீட்டுக்குச் சென்ற சிறுமியை சீரழித்த ஆடவர்

தம்மை அப்பாவாக மதித்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆடவருக்கு நேற்று எட்டாண்டு சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. மணவிலக்கு பெற்ற, இரு பிள்ளைகளுக்குத் தந்தையான அந்த 48 வயது ஆடவர் இதற்கு முன்னர் பாலியல் பலாத்கார குற்றத்துக்காக சிறைத் தண்டனை பெற்றவர் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டு முதல்பாதியில் பள்ளிக்கூட மாணவியான அச்சிறுமி பொதுக்கூடம் ஒன்றில் தமது தோழிகளுடன் இருந்தபோது அந்த ஆடவர் தம்மை ‘பப்பா’ என்று கூறிக்கொண்டு அறிமுகம் ஆனார். அதன் பின்னர்  அவரை அச்சிறுமி அடிக்கடி காண நேர்ந்தது. 

2017 ஆகஸ்ட்டுக்கும் செப்டம்பருக்கும் இடைப்பட்ட சமயத்தில் ஆடவரின் வீட்டுக்கு சிறுமி தமது தோழியுடன் சென்றார். அங்கு ஆட வரின் மகனும் அப்போது இருந்தார். சிறிது நேரத்தில் சிறுமியின் தோழியும் ஆடவரின் மகனும் அங்கிருந்து சென்ற பின்னர், ஆடவர் தமது வேலையைக் காட்டத்தொடங் கினார். சிறுமியின் கால்களைப் பிடித்து விட்ட பின்னர் அவரது உடைகளைக் களையத் தொடங்கினார். சிறுமி தயங்கி தர்மசங்கடத்தை வெளிப்படுத்தியபோது நைசாகப் பேசி பாலியல் பலாத்காரம் செய்தார். மிகவும் மன உளைச்சல் அடைந்த சிறுமி ஆடவரின் செய்கையை நிறுத்தச் சொன்னதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் விவரித்தார்.

பின்னர் 2017 டிசம்பருக்கும் 2018 ஜனவரிக்கும் இடைப்பட்ட சமயத்தில் ஆடவரின் வீட்டில் தமது தோழியுடன் சிறுமி உறங்கிக்கொண்டு இருந்தபோது அவரை மானபங்கம் செய்ய ஆடவர் முயன்றார். தூக்கத்திலிருந்து விழித்த சிறுமி கால் சட்டையும் உள்ளாடையும் முட்டி வரை இறக்கிவிடப்பட்டு இருந்ததை அறிந்து உடனடியாக அவற்றைச் சரிசெய்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

இச்சம்பவங்களை அறிந்த சிறுமியின் தாய் போலிசில் புகார் செய்தார். ஓடி ஒளிந்த ஆடவரை போலிசார் தேடிக் கண்டுபிடித்தனர்.

சிறுமியின் அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு ஆடவரைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. வயது குறைந்த பெண்  ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்கு இருபதாண்டு வரை சிறை, அபராதம், பிரம்படிகள் தண்டனைகளாக விதிக்கப்படலாம்.