அமைச்சர் சான்: சிங்கப்பூரர்கள், நிறுவனங்களுக்கு உதவும் விதத்தில் புதிய வரவுசெலவுத் திட்டம்

சிங்கப்பூரர்களுக்கும் நிறுவனங்களுக்கும் உதவக்கூடிய பல நடவடிக்கைகள் புதிய வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற்று இருக்கும் என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார். 

சிங்கப்பூருக்கு 2019ல் அதிக முதலீடுகள் வந்தபோதிலும் உலக சூழ்நிலை இன்னமும் நிலையில்லாமல் இருப்பதால் உள்நாட்டில் உற்பத்தித்திறனைப் பெருக்க மேலும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். 

பொருளியல் நிலவரம் பற்றி கவலை கொண்டுள்ள சிங்கப்பூரர்களுக்கும் நிறுவனங்களுக்கும் உதவுவதற்காக வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கம் பல நடவடிக்கைகளை அறிவிக்கும் என்றும் அவை தேர்ச்சிகள் மேம்படவும் மறுதேர்ச்சி பெறவும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் உதவும் என்றும் திரு சான் தெரிவித்தார். 

வர்த்தக தொழில் அமைச்சின் ஆண்டுக் கண்ணோட்டம் பற்றி அமைச்சர் ஊடகத்திடம் இன்று (ஜனவரி 16) பேசினார். மெத்தனப்போக்கு கூடாது என்று வலியுறுத்திக் கூறிய திரு சான், முதலீட்டுச் சூழ்நிலை தொடர்ந்து சவால்மிக்கதாகவும் போட்டிமிக்கதாகவும் திகழ்வதைச் சுட்டிக்காட்டினார். 

அதேவேளையில், நிறுவனங்களின் போட்டித்திறனை மேம்படுத்துவது முதல் முதிய ஊழியர்களின்தேர்ச்சிகளை மேம்படுத்துவது வரை உள்ளூரிலும் பல சவால்களைச் சமாளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

40, 50 வயதைக் கடந்தவர்கள் ஆயுள் முழுவதும் தேர்ச்சிகளை மேம்படுத்திக்கொண்டு வேலை பெறும் தகுதியுடன் இருப்பதற்கு உதவியாக புதிய வரவுசெலவுத் திட்டத்தில் நடவடிக்கைகள் இடம்பெறும் என்று அமைச்சர் உறுதி தெரிவித்தார். 

“உங்களால் முடியாது என்று நினைத்து கவலைப்படாதீர்கள். நீங்கள் விரும்பும் வரை ஒவ்வொருவருக்கும் உதவி உண்டு. மேம்படுவதற்கு ஆதரவு உண்டு,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

#தமிழ்முரசு #வரவுசெலவுத்திட்டம்2020 #பட்ஜெட்202