பெண் மர்ம மரணம்; குழப்பத்தில் குடும்பத்தினர்

அடுத்த மாதம் திருமணமாக விருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது அவரது குடும்பத்தினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

தாதியராகப் பணியாற்றும் 28 வயது ஃபட்ஹில்லா முஹம்மது உசேன், ஈசூன் அவென்யூ 8ல் தம்முடைய பச்சை நிற ஹோண்டா மோட்டார் சைக்கிளுக்கு அருகே மயங்கிக் கிடந்தார்.

செவ்வாய்க்கிழமை மாலை போக்குவரத்து மிகுதியாக இருப்பது வழக்கம். ஆனால் இந்த விபத்து பற்றி யாரும் இதுவரை  சாட்சியமளிக்க முன்வரவில்லை.

இந்த நிைலயில் விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது பற்றி தெரியாமல் அவரது குடுபத்தினர் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்துள்ளனர்.

தொழில்நுட்பராகப் பணியாற்றும் உறவினர்களில் ஒருவரான ஜாட் ஹம்சா, 50, “அவராகவே விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்பதை குடும்பத்தினரால் நம்ப முடியவில்லை,” என்று கூறினார்.

“மோட்டார் சைக்கிளுக்கான உரிமம் பெற்றவுடன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் மோட்டார் சைக்கிளை வாங்கினார். எப்போதுமே பாதுகாப்பாக அவர் வாகனத்தை ஓட்டி வந்தார்,” என்றும் அவர் சொன்னார்.

சம்பவத்தன்று காலாங் ரோட்டில் உள்ள குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்திடமிருந்து புதிய பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டு திரும்பியபோது ஃபட்ஹில்லா விபத்தில் சிக்கினார்.

“பள்ளிவாசலில் இருந்தபோது மாலை 6.15 மணியளவில் சகோதரியிடமிருந்து அழைப்பு வந்தது. விபத்தில் சிக்கி ஃபட்ஹில்லா நம்மைவிட்டுச் சென்றுவிட்டதாக சகோதரி சொன்னார். இதைக் கேட்டதும் எனக்கு தாள முடியாத அழுகை வந்தது,” என்று திரு ஜாட் ஹம்சா கூறினார்.

மாலை 5.15 மணியளவில் தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலிசார் அங்கு ஃபட்ஹில்லா மயங்கிக் கிடந்ததைக் கண்டனர்.

உடனே அவரை போலிசார் மீட்டு டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

இந்த விபத்து குறித்து போலிசார் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.