சுடச் சுடச் செய்திகள்

புதுப்பொலிவு பெற்ற ‘ஜூரோங் லேக்’ வட்டார வீடமைப்புப் பேட்டை

1960களில் தொழிற்கூட நகராக உருவான ஜூரோங் தற்போது மக்கள் சந்தடி அதிகம் நிறைந்த பொலிவு நகராகக் காட்சி தருகிறது.

ஜூரோங் லேக் வட்டாரத்தில்  ‘நமது நகரின் மறுஉருவாக்கும்’ எனும் பொருள் படும் (ஆர்ஓஹெச்) திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்த பொலிவூட்டும் பணிகள் நிறைவுபெற்றுள்ளதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் நேற்று அறிவித்தது. இந்த வட்டாரம் ஈஸ்ட் கோஸ்ட், ஹவ்காங் ஆகியவற்றுடன் சேர்த்து கடந்த 2011ஆம் ஆண்டு புதுப்பொலிவூட்டும் பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

அந்த வட்டாரத்தில் உள்ள வீடமைப்புப் பேட்டைகளில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தோட்டங்கள், சமூக ஒன்றுகூடல்களுக்கான இடங்கள் உள்ளிட்ட பல புதிய வசதிகள் இத்திட்டத்தின் வழியாக கடந்த பல ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்டு வந்தன.

ஜூரோங் ஈஸ்ட் நகர மையத்துக்குப் புது வடிவம் தருவது அப்பணிகளுள் குறிப்பிடத்தகுந்த ஒன்று.  ஜூரோங் கேட்வே ரோட்டில் உள்ள புளோக்குகள் 130 முதல் 135 வரையிலான கட்டடங்களை உள்ளடக்கிய பகுதி அது. தற்போது அதற்கு ‘ஜே கனெக்ட்’ என்று புதிய பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இப்

பகுதியிலிருந்து ‘ஜே லிங்க்’ வழியாக ‘ஜேக்யூப்’ கடைத்தொகுதியைச் சென்றடைய முடியும்.

‘ஆர்ஓஹெச்’ பொலிவூட்டல் திட்டத்தின்கீழ் வீடமைப்புப் பேட்டைக்குட்பட்ட பத்து அக்கம்பக்க மையங்கள் உருமாற்றம் பெற்றுள்ளன. உதாரணமாக, புக்கிட் பாத்தோக் வெஸ்ட் கடைத் தொகுதியில் பசுமைக் கூரையுடன் கூடிய சமூக அரங்கும் கிட்டத்தட்ட 20 வகையான மூலிகைகள் கொண்ட சமூகத் தோட்டமும் இணைக்கப்பட்டு புதுப்பொலிவைத் தருகிறது. அவற்றுடன் 65 கடைகள், ஏராளமான உணவகங்கள், ஈரச்சந்தை, ஒரு பேரங்காடி என பலவும் அங்கு சூழ்ந்துள்ளன.

ஒன்பது ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட புதுப்பிப்புப் பணிகள் முடிவுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து ஜூரோங் ஏரி வட்டாரத்தில் வியாபாரம் பெருகும் என அங்குள்ள கடைக்காரர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வார இறுதி நாட்களில் அதிகமான குடியிருப்பாளர்கள் தங்கள் நேரத்தைச் செலவிட பிற பகுதிகளுக்குச் செல்வதைக் காட்டிலும் புதிய வசதிகளுடன் கூடிய இந்த வட்டாரத்தைத் தேர்வு செய்வதாக ஜூரோங் நகர மைய வியாபாரிகள் சங்கத் தலைவர் டான் கா ஆன் கூறினார்.

தற்போது ‘ஜூரோங் கேட்வே’ என அழைக்கப்படும் ஜூரோங் ஈஸ்ட் எம்ஆர்டியைச் சுற்றியுள்ள வட்டாரம் ஜூரோங் சமூக மருத்துவமனை, இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சுகாதாரப் பராமரிப்பு நடுவமாகவும் திகழ்கிறது. 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon